"காவி உடை அணிந்து கொண்டால் நாட்டில் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாமா? எத்தகைய பாரதூரமான குற்றத்தைச் இழைத்தாலும் பிக்குகளுக்குச் சிறைத்தண்டனை வழங்க முடியாதா?" என்ற ஆழமான மற்றும் நியாயமான கேள்விகள் இன்று சாதாரண பொதுமக்களின் நெஞ்சங்களை உலுக்கி வருகின்றது. மனித சமூகத்தின் ஒழுக்கத்தையும் பாதுகாப்பையும் பேணுவது சட்டத்தின் தண்டிக்கும் அதிகாரமே ஆகும். ஒரு மனிதன் எத்தகைய குற்றத்தையும் தவறைச் செய்தாலும் அவனுக்குத் தண்டனை கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டால், அவன் படிப்படியாகத் தனது மனிதத் தன்மையை இழந்து முழுமையான மிருகமாகவே மாறிவிடுவான். சட்டத்தின் மீதான பயமும் மரியாதையும் அற்ற ஒரு சமூகத்தில் குற்றங்கள் பெருகுவதும், அநீதி தலைவிரித்தாடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
நாட்டின் பொதுவான சட்டத் திட்டங்களுக்குப் புறம்பாக, ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை மட்டுமே முன்னிறுத்திச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முற்படுவதும், அதற்கு அரசியல் தலைவர்களும் அரச இயந்திரங்களும் பணிந்து வழிவிடுவதும் எந்த விதத்தில் நியாயமானதாகும்? சாதாரண குடிமகன் ஒரு சிறிய தவறு இழைத்தாலும் சட்டத்தின் இரும்புக்கரம் உடனடியாக நீண்டு அவனைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளும் போது, சட்டத்திற்கு மேலாக தங்களை நினைத்துக் கொள்ளும் சில மதகுருமார்களின் அத்துமீறல்களுக்கு முன்பாகச் சட்டம் மண்டியிடுவது எத்தகைய சமத்துவத்தை இந்த நாட்டுக்கு வழங்கப் போகிறது?
குற்றவாளிகள் எவராயினும் அவர்கள் அணிந்திருக்கும் உடையையோ, மதத்தையோ, பதவியையோ பார்க்காமல் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் முதன்மை விதியாகும். ஆனால், மத அடையாளங்களைப் போர்த்திக் கொண்டு சட்டத்தை வளைக்க நினைப்பவர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்குமாயின், அது சட்டத்தின் ஆட்சியையே முற்றாக அழித்துவிடும். தண்டனைகளில் இருந்து விலக்கு அளிக்கும் இத்தகைய ஆபத்தான முன்னுதாரணங்கள் தொடருமானால், நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, மனித பண்பாடுகள் அற்றுப்போய், சமூகம் காடாளும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.





