ஆசிரியர்களைக் கௌரவித்த மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி முதலாம் வருட ஆசிரியப் பயிலுநர்கள்!

 








































































EDITOR

மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் முதலாம் வருட ஆசிரியப் பயிலுநர்களால் ஆசிரியர் தின நிகழ்வு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

“சிறந்த ஆசிரியர் ஒருவர் அறிவை மட்டும் வளர்ப்பதில்லை; ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறார்” என்ற உயரிய சிந்தனையை மையமாகக் கொண்டு, 2025–2027 அணியைச் சேர்ந்த முதலாம் வருட ஆசிரியப் பயிலுநர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு 2026 ஒக்டோபர் 8ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் திரு. T. கனேசரத்தினம் பிரதம விருந்தினராகவும், கல்வி மற்றும் தர உறுதிப்பாட்டுக்கான உப தலைவர் திருமதி தர்ஷினி சுந்தரராஜன், நிதி மற்றும் நிர்வாகத்திற்கான உப தலைவர் திரு. D. T. நவநீதகிருஷ்ணன், தொடர்ச்சிக் கல்விக்கான உப தலைவர் திருமதி புஷ்பவாணி யோகநாதகிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் மும்மத வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது இந்து சமய வழிபாட்டை யதுஸ்மிகா மற்றும் துஷாந்தினி ஆகியோரும், கிறிஸ்தவ வழிபாட்டை லின்சி மற்றும் வருணி ஆகியோரும், இஸ்லாமிய வழிபாட்டை இகாபா மற்றும் ஹம்தா ஆகியோரும் முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி கீதம் இசைக்கப்பட்டதுடன், வரவேற்புரையும் வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. வரவேற்பு நடனத்தை கிருஷ்ணவேணி, கீர்த்தி மற்றும் கௌசி ஆகியோர் வழங்கினர்.

நிகழ்வில் தலைமை உரை, கவிதை நிகழ்வு மற்றும் ஆசிரியர்களைப் போற்றும் வாழ்த்துப்பா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன. கவிதை நிகழ்வில் ஜோஷேபா மற்றும் ஹினாயா ஆகியோர் பங்கேற்றதுடன், ஆசிரியர்களுக்கான வாழ்த்துப்பாவை இஹா ஃபா மற்றும் நஸ்ரீன் ஆகியோர் வழங்கினர்.

ஆசிரியப் பணியின் மகத்துவத்தையும் சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஆற்றும் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் வகையில் நிகழ்வுகள் அமைந்திருந்தன. இதன் சிறப்பம்சமாக, 27ஆவது அணியைச் சேர்ந்த ஆசிரியப் பயிலுநர்கள் தமது விரிவுரையாளர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கிக் கௌரவித்தனர்.

மேலும், ஆசிரியர்களைப் போற்றும் உரைகள் மற்றும் பேச்சு நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஹிருசன் மற்றும் சபீனா ஆகியோர் பேச்சு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், சிறப்பு விருந்தினரான திருமதி தர்ஷினி சுந்தரராஜனும் உரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியில் நன்றியுரை இடம்பெற்றதுடன், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் சேவையை நினைவுகூர்ந்து அவர்களைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஆசிரியப் பயிலுநர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இடையிலான மதிப்பையும் நல்லுறவையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

“ஆசிரியர்கள் சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புகின்றார்கள்” என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில் இவ்வாசிரியர் தின நிகழ்வு நிறைவடைந்தது.