EDITOR
சர்வதேச ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் ஒக்டோபர் 5ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கல்வித்துறையில் அவர்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இத்தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
யுனெஸ்கோ மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இணைந்து 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி ஆசிரியர்களின் நிலை தொடர்பான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில், 1994ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு ஆசிரியர்களின் நிலை தொடர்பான அந்தப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் முக்கியமான ஆண்டாகும்.
ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு பாடங்களை மாத்திரம் கற்பிப்பவர் அல்ல. அவர்களின் அறிவை வளர்த்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தி, ஒழுக்கம், பண்பு, பொறுப்பு மற்றும் வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டும் மகத்தான ஆளுமையாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், இலங்கையில் ஒக்டோபர் 6ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் ச. தருமதாஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக மாணவர்களால் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களுக்கும் மலர் செண்டுகள் வழங்கப்பட்டு, அன்பும் மரியாதையும் வெளிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாடசாலை நுழைவாயிலில் இருந்து ஆசிரியர்கள் பேண்ட் வாத்திய இசை முழங்க மாணவர்களால் மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். மாணவர்களின் உற்சாகமான வரவேற்பு நிகழ்வுக்கு மேலும் சிறப்பூட்டியது.
நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாக, ஆசிரியர்களால் ஆசிரியர் கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
மங்கள விளக்கேற்றலுடன் பிரதான ஒன்று கூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஆசிரியர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றதுடன், பாடசாலை அதிபரின் வரவேற்புரையும் இடம்பெற்றது.
ஆசிரியர்களால் பல்வேறு கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. இதில் ஆசிரியர்களின் பாடல்கள், குழு நடனங்கள், தனிநடனம் நகைசுவை கதைகள் , சோக கீதங்கள் மற்றும் விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
இதன்போது, அரங்கம் நிறைந்த மாணவர்களின் உற்சாகக் கோஷங்களுக்கு மத்தியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் அன்பும் நன்றியுணர்வும் வெளிப்பட்ட இந்த தருணம் நிகழ்வின் நெகிழ்ச்சியான பகுதியாக அமைந்தது.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, அன்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாசிரியர் தின நிகழ்வு, அன்பு, மரியாதை மற்றும் கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நிறைவுற்றது.
“ஒரு நல்ல ஆசிரியர் ஒரு பாடத்தை மட்டும் கற்பிப்பதில்லை; ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே உருவாக்குகிறார்.”



















































































