கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான பிரதீபா 2026 தேசிய மட்டக் கலைப் போட்டிகளில், மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சாதனை படைத்து தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டிகளில், மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பில் 09 போட்டிகளுக்காக மாணவர்கள் பங்கேற்றனர். நாடளாவிய ரீதியில் 212 கலாசார மத்திய நிலையங்களைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில், அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் முதன்மை நிலையைப் பெற்றுள்ளது.
இதன்போது, பின்வரும் போட்டிகளில் மாணவர்கள் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
முதலாமிடம் பெற்ற போட்டிகள்:
மேலைத்தேய வாத்தியம் – திறந்த பிரிவு.
கடம் வாத்தியம் – தனி, கனிஷ்ட பிரிவு.
கடம் வாத்தியம் – தனி, சிரேஷ்ட பிரிவு.
வண்ணத்துப்பூச்சி நடனம் – கனிஷ்ட பிரிவு.
காவடிச்சிந்து நடனம் – பெண்கள் குழுப் போட்டி.
அரிவி வெட்டு நடனம் – பெண்கள் பிரிவு.
இரண்டாமிடம் பெற்ற போட்டிகள்:
புத்தாக்கப் பாடல் – கலவன், ஆரம்பப் பிரிவு.
கீர்த்தனை – தனி, ஆண் சிரேஷ்ட பிரிவு.
மூன்றாமிடம் பெற்ற போட்டி:
மேலைத்தேயப் பாடல் – கனிஷ்ட பிரிவு.
இவ்வாறு ஆறு முதலிடங்கள், இரண்டு இரண்டாமிடங்கள், ஒரு மூன்றாமிடம் என மொத்தம் ஒன்பது வெற்றிகளைப் பதிவு செய்து மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் தனது ஆற்றலை தேசிய மட்டத்தில் நிலைநாட்டியுள்ளது.
மேலும், தொடர்ந்து மூன்றாவது தடவையாக 'அதி சூரத்தாவ விருது' மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்திற்குக் கிடைத்துள்ளமையும் இச்சாதனையின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த வெற்றிக்குப் பின்னணியில் உறுதுணையாக இருந்து வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களுக்கும், நிலையப் பொறுப்பதிகாரி அமலினி ரஞ்சித்குமார் அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கலாசார மத்திய நிலையத்தின் மூத்த வளவாளர் பாய்வா ஐயா, நடன வளவாளர் திருமதி பிரேமநந்தினி விஜயசேகரன், திரு. நரேந்திரன், திருமதி சாரங்கி மற்றும் மிருதங்க வளவாளர் திரு. நல்லலிங்கம் குகன் உள்ளிட்ட வளவாளர்களுக்கும் இச்சாதனைக்காகப் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான பயிற்சிகளிலும் ஒத்திகைகளிலும் அர்ப்பணிப்புடன் பங்கேற்ற மாணவர்கள், மாணவர்களை உரிய நேரங்களில் பயிற்சிகளுக்கு அனுப்பி ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் என அனைவரினதும் கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பின் கலை, கலாசாரத் திறமைகளை தேசிய மட்டத்தில் வெளிப்படுத்தி, மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ள மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் இந்தச் சாதனை பலரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளது.







.jpeg)




