EDITOR
இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு கிளையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மட்டக்களப்புக்கு வருகை தந்த உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவரான அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மஹராஜ் அவர்களுக்கு, மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரிச் சமூகத்தினரால் மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கல்லூரிக்கு வருகை தந்த சுவாமிகளுக்கு, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பாரம்பரிய ஆன்மீக மரபின்படி பாதநமஸ்காரம் செய்து தமது பக்தியையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர்.
இதன்போது, சுவாமிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஆசியுரை வழங்கி ஆசீர்வதித்தார்.
நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெற்ற இவ்வருகையும், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சுவாமிகளிடம் ஆசி பெற்றுக்கொண்ட இந்நிகழ்வும் கல்லூரிச் சமூகத்தினரிடையே ஆன்மீக மகிழ்ச்சியையும் பக்தி உணர்வையும் ஏற்படுத்தியது.





















































