“ஆளுமையாள் ஔவை” என்னும் வடமோடிக் கூத்து - ஒரு திறனாய்வு


வா.சரணியா, 
நுண்கலைத்துறை, 
கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை




இலங்கையின் கிழக்குப் பிராந்தியக் கலை மரபுகளில் மட்டக்களப்பு வடமோடிக் கூத்துக்குத் தனித்துவமான இடமுண்டு.

வடமோடிக் கூத்தானது ஆடல், பாடல், இசை, தாளம், உரையாடல், அபிநயம் மற்றும் உடை ஒப்பனை ஆகிய கலைக்கூறுகளை ஒருங்கிணைத்த மரபுவழி நிகழ்த்துகைக் கலையாகும். 

இது வெறுமனே பொழுதுபோக்கிற்கான கலை வடிவமாக மட்டுமன்றி, தமிழ் மக்களின் வரலாறு, பண்பாடு, இலக்கியம், சமூக விழுமியங்கள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கருவியாகவும் விளங்குகின்றது.

இத்தகைய பாரம்பரியக் கூத்துக்கலையைச் சமகாலச் சமூகச் சிந்தனைகளுடன் இணைத்து மீளுருவாக்கம் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய பாரம்பரிய அரங்க விழாவில் “ஆளுமையாள் ஔவை” எனும் வடமோடிக் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது. 

அந்த வகையில் ஓய்வுநிலை அதிபரும் மட்டுநகர் கல்லடி சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையின் இயக்குனருமான திருமதி தே. அருட்ஜோதி அவர்களின் முன்னீடு முகாமைத்துவத்திலும், அண்ணாவியார் சி.ஞானசேகரம், விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன் ஆகியோரின் பயிற்றுவிப்பிலும் உருவான “ஆளுமையாள் ஔவை” வடமோடிக் கூத்து மட்டக்களப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 மற்றும் 05 ஆந் திகதிகளில் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினால் “பாரம்பரிய அரங்க விழா 2026 ” எனும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டு நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு பாரம்பரிய நிகழ்த்துக் கலைகள் மேடையேற்றப்பட்டன. அதன் ஒரு பகுதியாக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆந் திகதி இரவு 09 மணியளவில் கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மாணவர்களால் “ஆளுமையாள் ஒளவை ” எனக் குறிப்பிடப்பட்ட வடமோடிக் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது.

“ஆளுமையாள் ஔவை” வடமோடிக் கூத்தின் கதைக்கருவானது சங்ககாலத் தமிழ் வரலாற்றையும் ஔவையாரின் அரசியல் மற்றும் சமூக ஆளுமையையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனுக்கும் இடையில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகின்றது. இப்போரினால் இரு நாட்டிலும் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்த அதியமான், போரைத் தவிர்த்து அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஔவையைத் தூதுவராக அனுப்புகின்றான்.

ஔவையார் தொண்டைமானின் அரசவைக்குச் சென்று தனது அறிவாற்றல், பேச்சாற்றல், துணிச்சல் மற்றும் இராஜதந்திரத் திறமையால் அவருடன் உரையாடுகின்றார். தொண்டைமானின் படைவலிமையைக் கண்டு அஞ்சாமல், தனது சாதுரியமான பேச்சின் மூலம் போரின் விளைவுகளை உணர்த்துகின்றார். இதன் மூலம் போரைத் தவிர்த்து அமைதியை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றார்.
இந்தச் சம்பவம் புறநானூற்றுப் பாடல் 95 உடன் தொடர்புடையதாகும். இச்சங்ககால வரலாற்றுச் செய்தியையே இக்கூத்தின் அடிப்படைக் கதைக்கருவாகக் கொண்டுள்ளனர். 

இக்கூத்தின் மிக முக்கியமான தனித்துவம் ஔவையாரின் பாத்திரப் படைப்பாகும். பொதுவாக ஔவையார் என்றதும் வயதான மூதாட்டியின் உருவமே பலரது நினைவுக்கு வருகின்றது. ஆனால் இக்கூத்தில் சங்ககாலத்தில் வாழ்ந்த இளமைத் துடிப்பும் அறிவாற்றலும்  கொண்ட ஔவையார் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்.

பொதுவாக ஔவையார் தொடர்பான கலைப்படைப்புகளில் அவரது முதுமைத் தோற்றமும் அறநெறிப் போதனைகளுமே அதிகம் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இக்கூத்து ஔவையாரின் இளமைக்கால வாழ்க்கையையும் தூதுவர் ஆளுமையையும் அரசியல் அறிவையும் மையப்படுத்துகின்றது. இதனால் ஔவையாரைப் பற்றிய பார்வையில் புதிய சிந்தனை உருவாகின்றது.

"ஆளுமையாள் ஔவை” வடமோடிக் கூத்தில் ஔவையார் முக்கியப் பாத்திரமாக விளங்கினாலும், அவருடன் தொடர்புடைய ஏனைய பாத்திரங்களும் கதையின் வளர்ச்சிக்கும் கருத்து வெளிப்பாட்டிற்கும் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன. 

குறிப்பாக அதியமான் நெடுமான் அஞ்சி, தொண்டைமான் இளந்திரையன், அரசவையினர், தூதுவர்கள் மற்றும் துணைப் பாத்திரங்கள் போன்றவை கதையின் வரலாற்றுப் பின்னணியையும் அரசியல் சூழலையும் வெளிப்படுத்த உதவுகின்றன. 

அதியமான் நெடுமான் அஞ்சி – மன்னன் பாத்திரம்

பார்வையாளராக இப்பாத்திரத்தை நோக்கும்போது, அதியமான் ஒரு வீரமிக்க மன்னன் மட்டுமல்லாமல், அறிவுடையவர்களின் ஆலோசனையை மதிக்கும் பண்புடைய ஆட்சியாளராகவும் வெளிப்படுகின்றார் என்பதை உணர முடிகின்றது. ஒரு மன்னனின் பெருமை அவனது படைபலத்திலும் வெற்றியிலும் மட்டுமல்லாமல், மக்களின் நலனைப் பாதுகாக்கும் சிந்தனையிலும் தங்கியுள்ளது என்ற கருத்தை இப்பாத்திரம் உணர்த்துகின்றது.

தொண்டைமான் இளந்திரையன் – எதிர்த்தரப்பு மன்னன்

இப்பாத்திரத்தின் மூலம் அதிகாரம், அரசியல் போட்டி, ஆட்சிப் பெருமை, வீர உணர்வு போன்ற அம்சங்களைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அதேவேளை, ஔவையார் இவரிடம் தூது சென்று உரையாடுவதன் மூலம் போரைத் தவிர்க்க முயற்சிக்கின்றார். ஔவையாரின் அறிவார்ந்த பேச்சையும் அணுகுமுறையையும் எதிர்கொள்ளும் தொண்டைமான் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் சூழல் உருவாகின்றது. இதன் மூலம் அறிவும் பேச்சாற்றலும் அரசியல் மோதல்களைக்கூட அமைதியான முறையில் அணுகுவதற்கு உதவுகின்றன என்ற கருத்து வெளிப்படுகின்றது.

அமைச்சர்கள் மற்றும் அரசவை சார்ந்த பாத்திரங்கள்

அமைச்சர்கள் மற்றும் அரசவை சார்ந்த பாத்திரங்கள் மன்னர்களின் ஆட்சிச் சூழலை வெளிப்படுத்தும் துணைப் பாத்திரங்களாக அமைகின்றன. ஒரு மன்னனின் முடிவுகள் தனிப்பட்ட சிந்தனையால் மட்டுமல்லாமல், அவனைச் சுற்றியுள்ள அரசவைச் சூழல், ஆலோசனைகள் மற்றும் அரசியல் நிலைமைகளாலும் பாதிக்கப்படுகின்றன என்பதை இத்தகைய பாத்திரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அதியமான் மற்றும் தொண்டைமான் ஆகிய இரு மன்னர்களையும் சுற்றியுள்ள அரசவைச் சூழலைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்கு இப்பாத்திரங்கள் உதவுகின்றன. மேலும், மன்னர்களின் அதிகாரம், அரசியல் மரபுகள் மற்றும் அக்கால ஆட்சிமுறைகள் தொடர்பான புரிதலையும் ஏற்படுத்துகின்றன.

*தூதுவர் சார்ந்த பாத்திர வெளிப்பாடு

இக்கதையின் மையக் கருத்து தூது மற்றும் சமாதான முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. ஔவையாரே முக்கியத் தூதுவராகச் செயல்படுகின்றார். அவருடைய பயணம், உரையாடல் மற்றும் சமரச முயற்சி ஆகியவற்றின் வழியாக இரு மன்னர்களுக்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்க்கும் முயற்சி வெளிப்படுத்தப்படுகின்றது.

இப்பாத்திர வெளிப்பாட்டின் மூலம் தூதுவர்களின் சமூகப் பொறுப்பையும் அரசியல் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடிகின்றது. குறிப்பாக, போரைத் தூண்டுவது மட்டுமே வீரத்தின் அடையாளமல்ல; போரைத் தடுத்து மக்களின் உயிரையும் நாட்டின் அமைதியையும் பாதுகாப்பதும் உயர்ந்த வீரச்செயலாகும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது.

எனது பார்வையில், இக்கூத்தின் சிறப்பம்சம் ஔவையாரை மட்டும் முன்னிலைப்படுத்துவதில் அல்ல; அவரைச் சுற்றியுள்ள ஏனைய பாத்திரங்களின் ஊடாகவும் அக்கால அரசியல் சூழலையும் சமூகப் பண்புகளையும் வெளிப்படுத்துவதிலேயே அமைந்துள்ளது. குறிப்பாக, இரு மன்னர்களுக்கு இடையில் உருவான பகையைத் தீர்ப்பதற்கு ஒரு பெண்ணின் அறிவாற்றலும் பேச்சாற்றலும் பயன்படுத்தப்படுவது மிகவும் சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் பெண்கள் சமூகத்திலும் அரசியலிலும் முக்கியமான பங்களிப்பைச் செய்யக்கூடியவர்கள் என்ற கருத்து வெளிப்படுகின்றது. எனவே, இக்கூத்து வரலாற்றுச் செய்தியை எடுத்துரைக்கும் ஒரு கலைநிகழ்ச்சியாக மட்டுமன்றி, சமாதானம், மனிதநேயம் மற்றும் பெண்களின் ஆளுமை ஆகியவற்றை வலியுறுத்தும் பண்பாட்டுக் கலைப்படைப்பாகவும் அமைந்துள்ளது.