வலய மட்டத்தில் வரலாற்று சாதனை! -மட்டக்களப்பு திராய்மடு தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு பாராட்டு.

 












2026ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த வலயமட்ட 'செயற்பட்டு மகிழ்வோம்' சிறுவர் விளையாட்டு நிகழ்வில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த மட்டக்களப்பு, மட்/திராய்மடு தமிழ் வித்தியாலய மாணவர்களையும், அவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. P. ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போட்டியில் வெற்றிபெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்ட மட்டக்களப்பு - கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிர்மலா அகிலன், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. V. லவக்குமார் மற்றும் மட்/கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் திரு. L. விஜேந்திரன் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவர்களையும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பல முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு அவற்றைத் தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றுள்ளமை, திராய்மடு தமிழ் வித்தியாலயத்தின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் வளர்ச்சியைப் பறைசாற்றுவதுடன், பாடசாலை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அமைந்துள்ளதாக அதிதிகள் பாராட்டினர்.

மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னால் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், பயிற்சியும், ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியவை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சாதனை மாணவர்களை வாழ்த்திக் கௌரவித்தனர்.