“வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்” – மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் சிறுவர் தின விழா

 











































































































EDITOR


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு, மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் சிறுவர் தின விழா ஒன்று கூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் தலைவர் திரு. ச. ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆரம்ப நிகழ்வாக வருகை தந்த அதிதிகள் சிறார்களினால் மாலை அணிவித்து அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம் மற்றும் வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.

சிறார்களின் ஆற்றல் மற்றும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன. சிறுவர்கள் தங்களது திறமைகளை உற்சாகத்துடன் வெளிப்படுத்தியமை நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.

விழாவில் கலந்துகொண்ட அனைத்து சிறார்களுக்கும் அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், இம்முன்பள்ளியில் கல்வி கற்று, பின்னர் அரச பாடசாலைகளில் கல்வியைத் தொடர்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பழைய மாணவர்களும் பரிசுப்பொதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், லைன்ஸ் கழகம் வந்தாறுமூலை 306-D10 சார்பில் சிறார்களுக்கான பேண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கப்பட்டதுடன், அரிமா பா. செல்வராஜா, உரிமையாளர் – யுனைடட் புத்தகசாலை, சார்பில் கற்றல் உபகரணங்களும் சிறார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக டாக்டர் பாமதி ஞானசெல்வம், விசேட சத்திரசிகிச்சை நிபுணர், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை, கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக திரு. ம. லச்சுதன், இணைப்பாளர் – முறைசாராக் கல்வி, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்; திரு. ஆ. பிரகாஷ், இணைப்பாளர் – ஆரம்பக் கல்வி, மட்டக்களப்பு கல்வி வலயம்; திரு. சா. சுதாகரன், அதிபர் மற்றும் திட்டப்பணிப்பாளர் – புதிய சந்தர்ப்பங்கள்; திருமதி நிலோஜினி ருதேஸன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர், மட்டக்களப்பு கல்வி வலயம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ அதிதிகளாக அரிமா கலாநிதி து. ஆதித்தன் PMAF, JP, 2ஆவது உதவி ஆளுநர், அரிமா கழகம் மாவட்டம் D10, மற்றும் அரிமா ஏ. பாஸ்கரன், பதவி நிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அழைப்பு அதிதிகளாக அரிமா பா. செல்வராஜா, உரிமையாளர் – யுனைடட் புத்தகசாலை; திருமதி ரேணுகா துரைராஜா, சிவானந்த வித்தியாலய பிரித்தானிய கிளை, ப.மா.ச உறுப்பினர்; திருமதி நித்தியகலா சிவநாதன், ஓய்வுநிலை உதவி அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 சிறார்களின் திறமைகளை ஊக்குவிப்பதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சிறுவர் தின விழா, சிறார்களுக்கு மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக நிறைவடைந்தது.