EDITOR
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி BONNINGTON பாலர் பாடசாலையில் சிறுவர் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
பாலர் பாடசாலை அதிபர் திருமதி LUKE அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணியகத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு முன் கல்விப் பணியக வெளிக்கள உத்தியோகத்தர் எஸ். பரணிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. திருச்செல்வம் மேகராஜ் மற்றும் ஓய்வுநிலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
BONNINGTON பாலர் பாடசாலை சிறார்களின் அறிவு, ஆக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதுடன், அவர்களின் ஆளுமையை மேம்படுத்தவும், பொது அறிவை விருத்தி செய்யவும் நோக்கமாகக் கொண்டு அறிவியல் சார்ந்த பல்வேறு கைவினைப் பொருட்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
முன்பள்ளி சிறார்கள் தங்களது கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கிய பல்வேறு கைவினைப் பொருட்களை ஆர்வத்துடன் காட்சிப்படுத்தியிருந்தனர்.
கண்காட்சியைப் பார்வையிட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என பலரும் வருகை தந்து சிறார்களின் ஆக்கப்பூர்வமான படைப்புகளைப் பார்வையிட்டனர்.
நிகழ்வின் நிறைவில் கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து சிறார்களுக்கும் கலந்துகொண்ட அதிதிகளால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சிறார்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இக்கண்காட்சி, சர்வதேச சிறுவர் தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடிய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.






















































