கூத்தரங்கின் இயக்கத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கும் வளதாரிகளுள் உடை ஒப்பனைக் கலைஞர் குறிப்பிடத்தக்க நபராவார். மத்தள அண்ணாவியார், ஏட்டண்ணாவியார், பிற்பாட்டுக்காரர் என்பவர்களுடன் கூத்தில் வரும் பாத்திரங்களுக்கான உடை, ஒப்பனை மற்றும் அணிகலன்கள், கைப்பொருட்கள் என்பனவற்றைத் தயாரித்து வழங்கிவரும் கலைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்து வருகின்றது. ஒரு கூத்தின் அரங்கேற்றத்தில் இந்த உடை, ஒப்பனைக் கலைஞரின் பங்குபற்றுகை மிகவும் இன்றியமையாததாகும்.
இந்தவகையில் மட்டக்களப்பின் பாரம்பரிய அரங்க வரலாற்றில் புகழ்பெற்ற பல உடை ஒப்பனைக் கலைஞர்கள் பற்றியும் அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது. இவர்களுள் ஐந்து தசாப்த காலமாகத் தொடர்ச்சியாக இயங்கிவரும் குறிப்பிடத்தக்க ஒரு உடை ஒப்பனைக் கலைஞராக மட்டக்களப்பு கொம்மாதுறையினைச் சேர்ந்த கலைஞர் பாலிப்போடி கமலநாதன் அவர்கள் விளங்குகின்றார்.
1967 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மிகப்பெரும்பாலும் மட்டக்களப்பின் வடபகுதியைச் (கல்குடா தேர்தல் தொகுதி) சேர்ந்த பல்வேறு ஊர்களிலும் நடைபெற்று வருகின்ற பாரம்பரிய நிகழ்த்து கலை வடிவங்களுக்கான உடை ஒப்பனைக் கலைஞராக இவர் செயலாற்றி வருகின்றார்.
1967 இலிருந்து இற்றை வரைக்கும் தான் உடை ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரியும் பாரம்பரியக் கூத்துக்கள் தொடர்பாக ஓர் எழுத்துப்பதிவினை இவர் பேணி வருகின்றமை கவனிப்பிற்குரிய விடயமாக இருக்கின்றது.
எந்த ஊரில், எத்தனையாம் ஆண்டு, எந்தக் கூத்து ஆடப்பட்டது என்பதையும் அதில் பங்குபற்றிய பாத்திரங்கள் யாவை என்பதையும் அதற்குத் தான் வழங்கிய ஆடைகள், அணிகலன்கள், கைப்பொருட்கள் எவை எவை என்பதையும் விபரமாகக் குறித்து இப்பதிவேட்டை இவர் பேணி வருகின்றார்.
இந்த வகையில் மட்டக்களப்பின் வடக்குப் பகுதியில் உள்ளடங்கும் ஊர்களான கதிரவெளி, வம்மிவெட்டுவான், கட்டுமுறிவு, அம்பந்தனாவெளி, வாகரை, பனிச்சங்கேணி, மாங்கேணி, காயாங்கேணி, நாசிவன்தீவு, புணானை, வாகனேரி, கறுவாக்கேணி, கிண்ணையடி, பேத்தாளை, கல்குடா, கிரான், கோரகல்லிமடு, பறங்கியாமடு, சந்திவெளி, பாலையடித்தோணா, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, வந்தாறுமூலை, களுவன்கேணி, கொம்மாதுறை, கொடுவாமடு, இலுப்பையடிச்சேனை, பாலர்சேனை, பூலாக்காடு, புலிபாய்ந்தகல், திகிலிவெட்டை, ஆயிலையடிச்சேனை, முள்ளிவட்டவான், மயிலவெட்டுவான், கானந்தனை, தன்னாமுனை, சத்துருக்கொண்டான் மற்றும் குருக்கள்மடம், அம்பிளாந்துறை, நாவிதன்வெளி, நாற்பதாம் கொலனி ஆகிய பல்வேறு ஊர்களிலும் நடைபெற்ற பாரம்பரிய கூத்தரங்க ஆற்றுகைகளுக்குத் தன்னால் வழங்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கியதாக இப்பதிவு ஏடு காணப்படுகின்றது.
1967 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பின் வடக்குப்பகுதி ஊர்களில் நடைபெற்றுவரும் பாரம்பரிய அரங்க ஆற்றுகைகள் பற்றிய ஒரு தொகுதி வரலாற்றை ,வருடைய இந்த காத்திரமான ஆவணத்தினூடாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. இவருடைய இச்செய்கை நமது பாரம்பரியக்கலைஞர்கள் எவ்வாறு தமது காலத்து வரலாறுகளைத் தாம் சார்ந்த துறைகளுக்கூடாக பதிவாக்கஞ் செய்து வந்துள்ளார்கள் என்கின்ற மரபுகளைப்பற்றி ஆராய்ந்தறிவதற்கான வழிகளையும் திறந்து தருகின்றது.
கூத்தரங்கின் உடை ஒப்பனைக் கலைஞராகவும் ஏறத்தாழ அரை நூற்றாண்டுகால கூத்தரங்க தகவல்களைப் பதிவு செய்துள்ள ஆக்கபூர்வமான ஒரு வரலாற்றுப் பதிவாளனாகவும் விளங்கும் கலைஞர் பா.கமலநாதன் அவர்கள் 1948 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 17 ஆந் திகதி சந்திவெளி எனும் ஊரில் பாலிப்போடி தங்கப்பிள்ளை தம்பதிகளுக்கு மூத்த மகனாகப்பிறந்தார். குடும்பத்தில் மூன்று ஆண்களுக்கும் மூன்று பெண்களுக்கும் இவர் மூத்த சகோதரன்.
இவருடைய தந்தையான பாலிப்போடி சந்திவெளியின் புகழ்பெற்ற அண்ணாவிமாருள் ஒருவர். இதனால் தந்தையாருடன் சிறு வயதிலிருந்தே கூத்தரங்குகளுக்குச் செல்வது இவருக்கு இயல்பாகிப் போனது. மத்தளம் வாசிப்பதில் தேர்ச்சியும் பெற்றார். ஆனாலும் கூத்துக்கான ஆடைகளையும் ஆபரணங்களையும் வடிவமைப்பதிலேயே இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. சிறு வயதில் கூத்துக்களைப் பார்த்து விட்டு அதனைப் போலச்செய்து விளையாடும் போது பலா இலை, தென்ன ஓலை முதலியவற்றைப் பயன்படுத்தி கூத்து ஆடும் தனது நண்பர்களை கூத்தர்களாக வடிவமைப்பதிலேயே தான் ஆர்வத்துடன் ஈடுபட்டதாகத் தனது ஆரம்பத்தை இவர் சொல்லி மகிழ்கின்றார்.
பின்னாட்களில் வர்ணக்கடதாசிகளைப் பெறும் வாய்ப்புக்கள் கிடைத்த போது தான் கூத்தர்களுக்கான உடைகளையும் பொருட்களையும் உருவாக்கியதாகவும் தன்னுடைய இருபதாவது வயதிலேயே தனது ஊரான சந்திவெளியில் ஆற்றுகை செய்யப்பட்ட'தெய்வபக்தி' எனும் மேடை நாடகத்திற்குரிய வேட உடைகளைத் தயாரித்துக் கொடுத்ததாகவும் இதற்காக இருபது சதம் கிடைத்ததாகவும் பின்னாட்களில் ஊர்கள் தோறும் கூத்துக்களும், இதிகாச, புராண மேடை நாடகங்களும் நடைபெற்ற சூழலில் தன்னிடம் வேட உடைகளைக் கேட்டு ஆட்கள் வருவது அதிகரித்தமையால் தான் இதனை ஒரு தொழில் துறையாகவே விருத்தி செய்ததாகவும் இவ்வாறு தான் 1967 இலிருந்து இற்றை வரைக்கும் செய்து வரும் பணியினைப் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறுகின்றார்.
கூத்தர்களுக்கான பூமுடி, கிரீடம், முடி, பதக்கம், இடுப்புப்பட்டி, கைக்கட்டு, கைப்புஜம், காப்ப, வாஸ், கோட் முதலியவற்றுடன் மரவுரி, சிவன் உடுப்பு, நாரதர் உடுப்பு, பண்டாரம் உடுப்பு, முனி உடுப்பு, பூதங்களுக்கான உடுப்பு, சடாயு உடுப்பு, அனுமார் உடுப்பு, புலியுடுப்பு என்பனவற்றையும், கட்டாரி, வில், அம்பு, தண்டாயுதம், கேடயம், வாள், வச்சிரவாள், சூலம், வேல், அம்புறாக்கூடு, கலப்பை, சக்கரம், குழல் முதலிய கைப்பொருட்களையும், கால்சதங்கை, மத்தளம், சல்லாரி முதலான இசைக்கருவிகளையும் வாடகைக்குக் கொடுப்பதனூடாகவும், கூத்தர்களுக்கு ஒப்பனை செய்வதன் மூலமாகவும் தனது வாழ்வாதாரத்திற்கான ஒரு பகுதி வருவாயினைப் பெற்றுக் கொள்கின்றார். இத்தோடு சைவ ஆலயங்களுக்கு மயில், எருது, சூரன், எலி, குதிரை, திருவாசி முதலிய சிற்பங்களை மரத்தில் வடிவமைத்து வழங்கியும் வருகிறார். கூடவே சப்பரம் வாடகைக்கு விடுவதனையும் மேற்கொண்டு வருகின்றார்.
அண்ணாவியார் பா.கமலநாதனாக...
ஒரு உடை ஒப்பனைக் கலைஞனாகத் தன்னை அடையாளப்படுத்திய பா.கமலநாதன் அவர்கள் வடமோடி, தென்மோடிக் கூத்துக்களைப் பயிற்றுவிக்கும் ஒரு அண்ணாவியாருக்கான தகுதிகள் கொண்டவர். தனது இளமைக்காலத்தில் கூத்துக்கள் பல ஆடியவர், மத்தளம் வாசிப்பதில் தேர்ச்சி மிக்கவர். இதனை அவர் மூன்று கூத்துக்களைப் பயிற்றுவித்து அரங்கேற்றியதனூடாக நிரூபித்துள்ளார். அதாவது தனது பிறந்த ஊரான சந்திவெளியில் 'பிரளாபதி யுத்தம்' எனும் வடமோடிக் கூத்தின் அண்ணாவியாராக அதனைப் பயிற்றுவித்து கோவில் திருவிழாக்காலத்திலே அரங்கேற்றினார். சந்திவெளியைச் சேர்ந்த பாரம்பரியக் கூத்துக்கலைஞர்கள் இதில் பங்குபற்றியிருந்தார்கள். இதேபோல் தான் புகுந்த ஊரான கொம்மாதுறையில் 'பவளக்கொடி' வடமோடிக் கூத்தினை அண்ணாவியாக நின்று பயிற்றுவித்து அரங்கேற்றினார்.
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில்
2013 ஆம் ஆண்டு கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களுக்கு 'கண்டியரசன்' தென்மோடிக் கூத்திற்கான அண்ணாவியாராகச் செயலாற்றி அக்கூத்தைப் பயிற்றுவித்து அரங்கேற்றியிருந்தார்.
இதேவேளை நுண்கலைத்துறையில் தயாரிக்கப்பட்ட 'அலங்காரரூபன்' – தென்மோடிக்கூத்து, 'வீரகுமாரன்' – வடமோடிக்கூத்து, 'நொண்டி நாடகம்' – தென்மோடிக்கூத்து, 'மழைப்பழம்' சிறுவர்களுக்கான வடமோடிக்கூத்து முதலிய கூத்துக்களுக்கான உடை ஒப்பனைக் கலைஞராகவும் பங்குபற்றி பணியாற்றியுள்ளார்.
கூத்தருக்கான வேட உடை, ஒப்பனை தொடர்பாக நுண்கலைத்துறை மாணவர்களுக்குச் செயல்முறை ரீதியில் பயிற்சிகளை வழங்கும் பாரம்பரிய வளவாளராகவும் இவர் பணியாற்றி வருகின்றார்.
மகிடிக் கூத்தரங்கில்...
மட்டக்களப்பில் மகிடிக் கூத்து வருடா வருடம் நடத்தப்படும் ஊராக சந்திவெளி திகழுகின்றது. ஒவ்வொரு சித்திரை வருடப் பிறப்பையடுத்து சந்திவெளியில் மகிடிக் கூத்து நடைபெற்று வருகிறது. கடந்த 2019 இலும் நடைபெற்றிருந்தது. இவ்வூரில் நடைபெறும் மகிடிக் கூத்தில் திரு.பா.கமலநாதன் அவர்களுடைய பங்களிப்பு மிகுதியானது. தனது தந்தைக்குப் பின்பிருந்து சந்திவெளி மகிடிக் கூத்தில் இவர் பிரதான பங்களிப்பு வழங்கி வருகின்றார். புதிய இளந்தலைமுறையினரிடையே மகிடிக்கூத்தரங்கு பரிச்சயமாவதற்கான பணிகளை இவர் வருடா வருடம் தனது பிறந்தகமான சந்திவெளியில் மேற்கொண்டு வருகின்றார். மகிடிக் கூத்தரங்கின் கட்டமைப்பு அதன் ஆற்றுகை முறைமைகள் தொடர்பான செயல்முறை அனுபவமும் தேர்ச்சியும் உள்ள கலைஞராக இவர் நம்மத்தியில் இயங்கி வருகின்றார்.
புலிக்கூத்தரங்கில்
மட்டக்களப்பில் பயில்நிலையிலுள்ள புலிக்கூத்தில் செயற்படும் கலைஞர்களுள் ஒருவராகவும் திரு.பா.கமலநாதன் அவர்கள் திகழுகின்றார். பலாச்சோலையிலுள்ள காளிகோயிலை அண்டிய பகுதியில் ஆற்றுகை செய்யப்படும் புலிக்கூத்தில் இவர் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை தமிழ்மொழித்தின கூத்துக்களில் இவருடைய பங்களிப்பு
இலங்கையில் கல்வித்திணைக்களத்தால் வருடாந்தம் தமிழ்மொழிமூல பாடசாலைகளில் நடத்தப்பட்டு வரும் தமிழ்மொழித்தின நிகழ்ச்சிகளில் ஓரம்சமாக பாரம்பரியக் கூத்துப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. படச்சட்ட மேடையில் ஒரு மணித்தியாலத்திற்கும் உட்பட்ட நேரத்தில் ஆடத்தக்கவாறு இக்கூத்துப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இப்போட்டிகளுக்கான கூத்துக்களைத் தயாரிக்கும் கலைஞர்களுள் பா.கமலநாதன் அவர்களும் ஒருவராக அடையாளங் காணப்படுகின்றார். இவர் தம்பலகாமம், வெருகல் பூநகர், பனிச்சங்கேணி, செங்கலடி, மண்டூர் 40 ஆம் கொலனி முதலிய இடங்களிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் தமிழ்மொழித்தினப் போட்டியின் பொருட்டு மேற்படி மேடைக் கூத்துக்களைத் தயாரிக்க உதவியுள்ளார். மாணவர்களுக்கு கூத்து ஆட்டங்களையும், பாடல்களையும் பயிற்றுவித்து, உடை, ஒப்பனைகளைச் செய்து மத்தள அண்ணாவியாகவும் செயற்பட்டு பாடசாலைகளில் தமிழ்மொழித்தின கூத்துக்கள் உருவாக பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
அண்மையில் கொரொனா விழிப்புணர்வு தொடர்பில் சந்திவெளியைச் சேர்ந்த கலைஞர்களால் கூத்தினை அடியொற்றி உருவாக்கப்பட்டு அளிக்கை செய்யப்பட்ட ஆற்றுகையிலும் பா.கமலநாதன் அவர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு இயங்கியிருந்தார்.
இவ்வாறு தனது வாழ்வின் பெரும் பகுதியை பாரம்பரியக் கலைகளுடன் சம்பந்தப்படுத்தி சக மனிதர்களையும் மகிழ்வித்து தானும் மகிழ்ந்து வாழும் மாண்புக்குரிய கலை ஆளுமையாக உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியாருமாகிய பா.கமலநாதன் அவர்கள் விளங்குகின்றார். இவருடைய வாழ்வையும் பணிகளையும் படிப்பினைகளாகக் கொண்டு இவருடைய அறிவையும் அனுபவங்களையும் புதிய தலைமுறையினர் பெற்றுக்கொள்ள வழியமைத்து இவரை மாண்பு செய்வோம்.
து.கௌரீஸ்வரன்





