EDITOR
மட்டக்களப்பு மண்ணில் முதன்முறையாக முன்னெடுக்கப்படும் நம்ம வீட்டு கச்சேரி யின் ஏற்பாட்டில், முதலாம் மாதாந்த கர்நாடக இசை அரங்கு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மண்ணில் கர்நாடக சங்கீதத்தின் சாஸ்திரிய இசை மரபை கம்பீரமாக நிலைநிறுத்தி, அதனை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இம்மாதாந்த இசை அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினரிடையே கர்நாடக இசை மீதான ஆர்வத்தை வளர்த்து, மட்டக்களப்பின் இசை மரபையும் கலைப் பாரம்பரியத்தையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதே இந்நிகழ்வின் முக்கிய குறிக்கோளாகும். இதற்காக இளம் இசைக் கலைஞர் டனித் அவர்களின் முயற்சிக்கு மட்டக்களப்பு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானதாகும்.
முதலாவது மாதாந்த இசை அரங்கில், குரலிசையை கலாநிதி சியாமளாங்கி கருணாகரனும், முழவிசையை கலாநிதி ப. திவ்வியரூப சர்மாவும், நரம்பிசையை செல்வன் கெ. டனித்தும் வழங்கி, தமது இசைத் திறமையால் அரங்கை அலங்கரித்தனர்.
இந்நிகழ்வில் சங்கீதப் பிரியர்கள், இசை ஆர்வலர்கள், நலம் விரும்பிகள், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பிரதேச பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இசை விருந்தை ரசித்தனர்.
இசை அரங்கு நிறைவடைந்ததன் பின்னர், பங்கேற்ற கலைஞர்களுக்கு கலாநிதி பிரியா ஜெகதீஸ்வரன் நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.
மாதந்தோறும் தொடர்ந்து இந்த இசை அரங்கு நடைபெறவுள்ள நிலையில், மட்டக்களப்பு மண்ணில் கர்நாடக இசையின் சாஸ்திரிய மரபை மேலும் வலுப்படுத்தி, அடுத்த தலைமுறையினரிடம் அதனை எடுத்துச் செல்லும் முயற்சிக்கு இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“மாதம் தோறும் இசை அரங்கு... மட்டக்களப்பின் இசை மண்ணில் இனி தொடர்ந்து ஒலிக்கட்டும்!” என்ற எதிர்பார்ப்புடன் அடுத்த மாத கச்சேரியை இசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.


























