முதலுதவி பயிற்சியுடன் மாணவர்களின் உளவியல் வலிமை, தன்னம்பிக்கை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மற்றும் குழுவாகச் செயற்படும் ஆற்றல் ஆகியவற்றை வளர்ப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுவது அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் கல்விக்கான சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக ஆதரவு வலுவூட்டல் வளவாளரும், உளசமூக ஆதரவு மையத்தின் இலங்கைக்கான தேசிய ஒருங்கிணைப்பாளரும், இலங்கை மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினருமான தேசபந்து கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் தெரிவித்தார்.
மாணவர்கள் அவசரநிலைகளில் முதலுதவி வழங்குவதற்கான அறிவையும் நடைமுறைத் திறன்களையும் பெற்றுக்கொள்வதுடன், தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தன்னம்பிக்கையுடன் கையாளும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் கூறினார்.
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவர்களுக்காக சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் முதலுதவி வதிவிடப் பயிற்சி கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு (19.09.2026) மகாஜனக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியின் கேடட் லெப்டினன் Mr. S. Stephan அவர்களின் தலைமையில், கேடட் லெப்டினன் Dr. Saba Sundararajah JP, Adult Secretary மற்றும் முன்னாள் மாவட்ட ஆணையாளர் அவர்களின் நெறிப்படுத்தலில் இப்பயிற்சி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சிறப்பு உளவியல் வலுவூட்டல் அமர்வை முன்னெடுத்தார்.
“பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது?” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இவ்வமர்வில், மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளை அடையாளம் காணுதல், அவற்றை பதற்றமின்றி அணுகுதல், உரிய தீர்வுகளைத் தெரிவு செய்தல், மன அழுத்தமான சூழ்நிலைகளில் தம்மை வலுப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் சவால்களில் இருந்து ஆக்கபூர்வமாக மீண்டு வருதல் தொடர்பான உளவியல் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
முதலுதவி என்பது உடலில் ஏற்படும் அவசரநிலைகளைக் கையாள்வதற்கான அறிவை மட்டும் வழங்குவதல்ல. அவசரமான சூழ்நிலையில் பதற்றமின்றி சிந்தித்து, நிலைமையைப் புரிந்துகொண்டு, பொறுப்புடன் செயற்படும் மனப்பக்குவத்தையும் வளர்ப்பதாகும் என கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அவர்களின் வயதுக்கும் புரிதல் மட்டத்திற்கும் ஏற்ற வகையில் உளவியல் ரீதியான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. கல்வி நடவடிக்கைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சவால்களைச் சரியான முறையில் கையாள்வதன் மூலம் கற்றலில் கவனம் செலுத்துவதையும் கல்வித் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மாணவர்களின் தன்னம்பிக்கை, குழு ஒத்துழைப்பு, தொடர்பாடல் திறன், தலைமைத்துவப் பண்பு மற்றும் பிரச்சினைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குழுச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
இச்செயற்பாடுகளில் சிறப்பாகப் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், உளசமூக ஆதரவு தொண்டர் திருமதி R. சியாமளா அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிறிய பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
முதலுதவி அறிவுடன் உளவியல் வலுவூட்டலையும் இணைத்துப் பயிற்சி வழங்குவது, மாணவர்கள் அவசரநிலைகளையும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களையும் அமைதியாகவும் பொறுப்புடனும் கையாள்வதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் என கௌரவ கலாநிதி S. பிரான்சிஸ் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மகாஜனக் கல்லூரி அதிபர் திரு. S. சாந்தகுமார், சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாணவர்களுக்கான பொறுப்பாசிரியர் திருமதி ரேகா கஜேந்திரன், உப பிரிவு அதிகாரி திரு. செந்தீபன், உளசமூக ஆதரவு தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)





