மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கலை கலாச்சார மற்றும் புரிந்துணர்வு விழா -2026



 























































































மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மற்றும் அம்பாறை பண்டாரநாயக்க தேசிய மகளிர் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளும் இணைந்து ஏற்பாடு செய்த கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய புரிந்துணர்வு விழா மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் S. தருமதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், விசேட அதிதியாக அம்பாறை பண்டாரநாயக்க தேசிய மகளிர் கல்லூரி அதிபர் திருமதி W.E. ஸ்ரீயானி வீரகோன் கலந்து சிறப்பித்தார்.

விழாவின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம் மற்றும் வரவேற்பு நடனம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து மாணவிகளின் பங்கேற்புடன் தமிழ் மற்றும் சிங்கள கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகள், நடனங்கள் மற்றும் பாடல்கள் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. இரு சமூகங்களினதும் கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்வுகள், விழாவில் கலந்து கொண்ட அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.

மேலும், பாடசாலை வளாகத்தில் சிங்கள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கப்பட்டு, அதிதிகள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டன.

இன, மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து மாணவர்களிடையே நட்புறவு, சமூக ஒருமைப்பாடு, கலை மற்றும் கலாச்சாரப் புரிந்துணர்வை வளர்ப்பதுடன், இலங்கையின் பன்முகத்தன்மையை மதிக்கும் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் உயரிய நோக்கில் இவ்விழா முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஒரே மேடையில் இணைத்த இந்நிகழ்வு, ஒற்றுமையில் பன்முகத்தன்மையைப் போற்றும் ஒரு சிறப்பான முன்னெடுப்பாக அமைந்தது.