இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் கல்வியாளர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள புலமையாளர்களை மாண்பு செய்யும் விழா கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 09.09.2026 ஆந் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.
இவ்விழாவின் அதிதிகளாக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஷ் சுரேஷ் அவர்களும், நிதியாளர் எம். எம். முகமட் பாரிஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கலை கலாசார பீடத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கலாநிதி சி. மௌனகுரு, , திரு மா. செல்வராஜா, கலாநிதி செ. யோகராசா, பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ், கலாநிதி செல்லையா அருள்மொழி, கலாநிதி சாந்தி கேசவன் ஆகியோரும், , கலாநிதி சிவக்கொழுந்து பொன்னையா, கலாநிதி ஜி. தில்லைநாதன், திருமதி ரூபி வலன்ரினா பிரான்சிஸ், மற்றும் ஆங்கில மொழிப் போதனாப் பிரிவில் போதனாசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு எஸ். எம். பீலிக்ஸ், திரு பி. எஸ். ஜெயசிங்கம், செல்வி எஸ். கலைமதி, திரு ச. சசிதரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டு மாண்பு செய்யப்பட்டனர்.
முற்பகல் பத்து மணியளவில் நுண்கலைத்துறையின் பண்பாட்டு இசையணியின் உற்சாகமான வரவேற்புடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் நல்லையா மண்டபத்துள் அழைத்து வரப்பட்டார்கள், அதையடுத்து அதிதிகளால் மங்கல தீபம் ஒளிரச் செய்யப்பட்டது, இதையடுத்து சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடனத்துறை மாணவர்களின் வரவேற்பு நடனம் ஆற்றுகை செய்யப்பட்டது, அடுத்து விழாக்குழுவின் தலைவர் திரு வ. அழகரெட்ணம் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றிருந்தது அதையடுத்து பிரதம அதிதியான கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஷ் சுரேஷ் அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து கௌரவ விருந்தினர்களான ஓய்வு நிலை கல்வியாளர்களுக்குரிய மாண்புகள் செய்யப்பட்டன பீடாதிபதியும், விழாக் குழுவினரும் மாண்புகளை வழங்கினர்,
அடுத்து மாண்புபெற்ற கல்வியாளர்களின் ஏற்புரைகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டன,
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் தாமும் தமது காலத்தின் பங்காளர்களும் வழங்கிய காத்திரமான பங்களிப்புகளை நினைவிற் கொணர்ந்தவையாக ஏற்புரைகள் காணப்பட்டன.
அடுத்து அதிதியாக வந்த கலை கலாசார பீடத்தின் வெளிவாரி அங்கத்தவரான ஓய்வுநிலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் அவர்கள் தமது ஆசிரியர்களை, சக புலமையாளர்களை அழைத்து மாண்பு செய்யும் கலை கலாசார பீடத்தின் நன்றி நவிலும் விழாவின் சிறப்பை சுட்டிக்காட்டி இதனை ஒழுங்கமைத்தவர்களைப் பாராட்டினார்.
நிறைவாக விழாக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் நா. வாமன் நன்றியுரை வழங்கினார்.
இந்த விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பை நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளரான திரு து. கௌரீஸ்வரன் அவர்கள் அழகுறச் செய்திருந்தார்.
மறைந்த கல்வியாளர்களான வணபிதா டொமினிக் சாமிநாதன் சார்பில் அவருடைய சகோதரரும், கலாநிநி செ. யோகராசா சார்பில் அவருடைய மகளும் மாண்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.
இவ்வாறு, கிழக்குப்பல்கலைக்கழகத்தினுடைய கலை கலாசார பீடத்தின் வளர்ச்சியில் தமது காலத்தில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கிய ஒய்வுநிலைக் கல்வியாளர்களை வரவழைத்து நன்றியுணர்வோடு அவர்களை மாண்பு செய்தமை மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.



















































































