
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு முன்னேற்றமாக, சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் T. வரகுணம் ஞாபகார்த்த மண்டபம் நேற்று (02.09.2026) காலை 9.00 மணியளவில் பிள்ளையாரடியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.
நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இப்பிரமாண்டமான மண்டபத்தில் சுமார் 1,000 பேர் அமரக்கூடிய வசதி காணப்படுவதுடன், பல்கலைக்கழகத்தின் முக்கிய கல்வி, கலாசார மற்றும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளை நடத்துவதற்கான சிறப்பான இடமாகவும் இது அமையவுள்ளது.
சுமார் 800 மில்லியன் ரூபா செலவில், குவைத் நாட்டின் நிதியுதவியுடன், உயர்கல்வி அமைச்சின் மேற்பார்வையில் இம்மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.
திறப்பு நிகழ்வில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி. சதானந்தன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ப. பிரதீபன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளுக்கு மாத்திரமன்றி, மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கான பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவதற்கும் இம்மண்டபம் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 30ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா இம்மண்டபத்திலேயே நடைபெறவுள்ளமை இதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
இம்மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து, அதன் நிறைவை உறுதி செய்வதில் பீட நிர்வாகத்தினதும், குறிப்பாக பீடாதிபதியினதும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் எதிர்கால தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கும் இத்தகைய உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுசேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பயணம் புதிய மைல்கற்களை நோக்கி தொடர்ந்து முன்னேறட்டும்!












































