மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள பெரியபுல்லுமலை R.C.T.M. பாடசாலையில் மாணவர்களின் நவீன கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், நவீன வசதிகளுடன் கூடிய கணினி ஆய்வுகூடம் திறந்து வைக்கப்பட்டதுடன், பாடசாலைக்குத் தேவையான பல்வேறு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் திரு. சந்திரவர்ணன் அவர்களின் தலைமையில் நேற்று 03.09.2026 நடைபெற்ற இந்நிகழ்வில், கணினி ஆய்வுகூடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்குத் தேவையான பல்வேறு பொருட்களும் கையளிக்கப்பட்டன.
போதிய அடிப்படை வசதிகள் இல்லாத சூழலிலும் கல்வியைத் தொடர்ந்து வரும் இப்பாடசாலை மாணவர்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அவர்களுக்கு நவீன டிஜிட்டல் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இக்கணினி ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.
"ஒரு பானை" (Oru Paanai) தர்ம ஸ்தாபனத்தின் தலைவர் கௌரவ சுவாமிநாதன் ஐயா அவர்களின் வழிகாட்டலிலும், இலங்கையில் சேவையாற்றி வரும் திரு. சாந்தகுமார் ஐயா அவர்களின் முன்னெடுப்பிலும், அமரர் ராம் சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இக்கணினி ஆய்வுகூடம் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டது.
இத்திட்டத்தை பெரியபுல்லுமலை R.C.T.M. பாடசாலைக்கு பெற்றுக்கொடுப்பதில் "நம்மவர் கல்வி அபிவிருத்தி" அமைப்பின் இணைப்பாளரும் ஆசிரியருமான திரு. ஜே. மேவின் அவர்கள் முக்கிய இணைப்பாளராகச் செயற்பட்டிருந்தார்.
கணினி ஆய்வுகூடத்திற்கு மேலதிகமாக, பாடசாலையின் ஏனைய தேவைகளையும் கருத்திற் கொண்டு பல்வேறு கொடையாளர்களின் பங்களிப்பில் விளையாட்டு உபகரணங்கள், கபட் மற்றும் வகுப்பறைகளுக்கான வெள்ளைப் பலகைகள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
கனடாவைச் சேர்ந்த சமூக சேவையாளர் டொக்டர் K. ஜீவகுமார் அவர்களின் இணைப்பில், டொமினிக் தம்பிப்பிள்ளை, சுதாகர் பாக்கியநாதன், சதீஷ் வல்லிபுரம் மற்றும் டொக்டர் K. ஜீவகுமார் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், தரம் 5 மாணவர்களின் தேவையை கருத்திற் கொண்டு சிறிய கபட் ஒன்றும் பாடசாலைக்கு வழங்கப்பட்டது.
அதேவேளை, கனடா ஒன்ராறியோவைச் சேர்ந்த சமூக சேவையாளரும் தொழிலதிபருமான திரு. செல்லத்துரை வெற்றிவேல் அவர்களின் அனுசரணையில், பாடசாலையின் வகுப்பறைகளுக்காக ஆறு வெள்ளைப் பலகைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட வேலன் இலவச கல்வி நிலையத்தின் தலைவர் ஐயா தவராஜா அவர்கள், பெரியபுல்லுமலை பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் அப்பகுதியின் சூழ்நிலையை கருத்திற் கொண்டு, மாணவர்களுக்காக விசேட இலவசப் பிரத்தியேக கல்வி நிலையம் ஒன்றை அமைத்துத் தருவதற்கு முன்வந்தார்.
இதன் மூலம் ஏற்கனவே "ஒரு பானை" அமைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ள நவீன கணினி கல்வி வாய்ப்புடன், மாணவர்களின் மேலதிக கல்வி வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
எல்லைக் கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து வழங்கியுள்ள இவ்வுதவிகள், அப்பகுதி மாணவர்களின் கல்விப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என பாடசாலை சமூகம் தெரிவித்தது.
இந்நிகழ்வை பாடசாலையின் பழைய மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
எல்லைக் கிராமத்து மாணவர்களின் கல்விச் சுடரை ஏற்றிவைத்த "ஒரு பானை" அமைப்பினருக்கும், இத்திட்டங்களுக்கு பங்களிப்பு செய்த அனைத்து கொடையாளர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
.jpeg)

.jpeg)

.jpeg)






