இலங்கை சாரணர் வரலாற்றில் புதிய அத்தியாயம்: முதல் முறையாக “போலீஸ் சாரணர் பிரிவு” உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.

 






( மின்மினி மின்ஹா )
 
 
இலங்கை சாரணர் இயக்க வரலாற்றில் முதல் முறையாக “போலீஸ் சாரணர் பிரிவு” உத்தியோகபூர்வமாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சட்டத்தரணி. மனோஜ் நாணாயக்கார அவர்களின் யோசனைக்கு அமைவாக உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில், இந்த புதிய பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணாயக்கார ஆகியோர் தலைமையேற்றனர்.
மேலும், இலங்கை சாரணர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் ரன்சிறி பெரேரா, தேசிய பயிற்சி ஆணையாளர் கேர்ணல். பத்மலால் பெரேரா, தேசிய நிகழ்ச்சி ஆணையாளர் கீத் ரமேஷ் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதேவேளை, இலங்கை பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி நிர்வாக பொறுப்பிலான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, மேல் மாகாண பொறுப்பிலான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
நாட்டின் சிறார்களில் ஒழுக்கம், தலைமைத்திறன், செயற்பாட்டு திறன், நல்ல அணுகுமுறை மற்றும் படைப்பாற்றலை வளர்த்தெடுப்பதோடு, பொலிஸ் சேவையை மாணவர்களிடம் நெருக்கமாக அறிமுகப்படுத்துவது, சட்டம் மற்றும் சமாதானத்தின் முக்கியத்துவத்தை சமூகத்தில் பரப்புவது ஆகியவை இந்த புதிய பிரிவின் பிரதான நோக்கங்களாகும்.
இத்திட்டம் மூலம் சாரணர் இயக்கத்திற்கும் , பொலிஸ் துறைக்கும் புதிய சக்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பொலிஸ் துறையின் 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போது சாரணர் செயற்பாடுகள் இல்லாத 160 பாடசாலைகளில் 160 போலீஸ் சாரணர் குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டிலேயே முதல் “போலீஸ் சாரணர் ஜம்போரி” நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் 500 பொலிஸ் நிலையங்களை மையமாகக் கொண்டு, சாரணர் செயற்பாடுகள் இல்லாத 500 பாடசாலைகளில் 500 போலீஸ் சாரணர் குழுக்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதம சாரணிய ஆணையாளர் மனோஜ் நாணாயக்கார தெரிவித்துள்ளார்.