மட்டக்களப்பு மண்ணின் கலைப் படைப்பாக வெளியாகி, சர்வதேச அளவில் சாதனைகளைப் படைத்து வரும் ‘சாவடி’ திரைப்படத்தின் 300வது நாள் வெற்றி விழாவும், ‘சாவடி’ விருது விழாவும் கடந்த சனிக்கிழமை (11.07.2026) மாலை 5.00 மணிக்கு தாழங்குடா PCA Cine Max திரையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பிலிருந்து வருகை தந்த சங்கவி பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் Dr. துரைராசா சுரேஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், மட்டக்களப்பின் முன்னணி திரைப்பட இயக்குநர்கள், சினிமா கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் அழைப்பு அதிதிகளாக இதில் பங்கேற்றிருந்தனர்.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட ‘சாவடி’ திரைப்படம், இதுவரை மொத்தம் 144 சர்வதேச விருதுகளைக் குவித்து மட்டக்களப்பு மண்ணுக்கு உலகளாவிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளது.
கலைஞர்கள் பலரைத் தொடர்ந்து உருவாக்கி வரும் ஆரையம்பதி மண்ணைச் சேர்ந்த செல்வி சுலக்ஷி ராஜா, இத்திரைப்படத்தில் 05 பாடல்களைப் பாடி பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, இவர் பாடிய பாடல் ஒன்றுக்காக 05 சர்வதேச விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு விருது வழங்கி கௌரவித்த சர்வதேச திரைப்பட விழாக்கள் விபரம்:
ஒன் லீஃப் சர்வதேச திரைப்பட விழா (ONE LEAF International Film Festival – திரிபுரா, இந்தியா)
நாகாலாந்து சர்வதேச திரைப்பட விழா (NAGALAND International Film Festival)
நேபாள் விங்ஸ் சர்வதேச திரைப்பட விமர்சகர்கள் விழா (NEPAL WINGS International Critics Film Festival)
கிரவுன் சர்வதேச திரைப்பட விழா (Crown International Film Festival)
இந்திய சுயாதீன திரைப்பட விழா (The Indian Independent Film Festival)
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவியான சுலக்ஷி ராஜா, கல்விப் பின்புலத்துடன் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட அம்மன் ஆலயங்களில் கும்மி மற்றும் காவியப் பாடல்களைப் பாடி ஆன்மீகப் பணியிலும் தடம் பதித்துள்ளார். இவரால் பாடப்பட்ட ஆன்மீகப் பாடல்கள் இருவட்டுகளாகவும் (CD) வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'குளோபல் தமிழ் சங்கம்'அமைப்பின் யூடியூப் (YouTube) தளத்திலும் தொடர்ந்து பாடல்களைப் பாடி சர்வதேசத் தமிழ் நேயர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இளம் வயதிலேயே மட்டக்களப்பு மண்ணுக்கும், ஆரையம்பதி கிராமத்திற்கும் சர்வதேச அளவில் பெருமை தேடித்தந்துள்ள சாதனைப் பாடகி செல்வி சுலக்ஷி ராஜாவுக்கு எமது ஊடகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.









