


SIVAKUMAR.M
மட்டக்களப்பு மண்ணின் கலைப் படைப்பாக வெளியாகி, சர்வதேச அளவில் சாதனை படைத்து வரும் ‘சாவடி’ திரைப்படத்தின் 300வது நாள் வெற்றி விழாவும், ‘சாவடி’ விருது விழாவும் கடந்த சனிக்கிழமை (11.07.2026) மாலை 5.00 மணிக்கு தாழங்குடா PCA Cine Max திரையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பிலிருந்து வருகை தந்த சங்கவி பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் Dr. துரைராசா சுரேஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், மட்டக்களப்பின் முன்னணி திரைப்பட இயக்குநர்கள், சினிமா கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் அழைப்பு அதிதிகளாக இதில் பங்கேற்றிருந்தனர்.
Deva Cine Production நிறுவனத்தின் 25 ஆவது தயாரிப்பாக, கடந்த 2025 செப்டம்பர் 26 அன்று வெளியான 'சாவடி' திரைப்படம், இலங்கை முழுவதும் 'Circuit' முறையில் 16 திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது. 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் எதிர்கொண்ட வாழ்வியலையும் அதன் வலிகளையும் சுமந்து, மூன்று முக்கோணக் கதைக் களங்களாக Deva Cine Production தயாரித்து வரும் தொடரின் முதல் பாகமே இந்த ‘சாவடி’ திரைப்படமாகும்.
திரைப்படம் வெளியாகி 11.07.2026 அன்றுடன் 300 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் வெற்றியைச் சிறப்பிக்கும் முகமாக இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படம் கடந்த ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 'குவியம் திரைப்பட விருது' விழாவில் சிறந்த ஒப்பனை, சிறந்த கலை இயக்கம், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த VFX ஆகிய 4 முக்கிய பிரிவுகளில் விருதுகளை வென்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட இத்திரைப்படம், இதுவரை மொத்தம் 144 சர்வதேச விருதுகளைக் குவித்து மட்டக்களப்பு மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
சர்வதேச ரீதியில் சிறந்த திரைப்படம், சிறந்த கதை, சிறந்த கலைப் படம், சிறந்த தயாரிப்பு, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த ஒளியமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த ஆடையமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு (எடிட்டிங்), சிறந்த VFX மற்றும் சிறந்த டப்பிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கிடைத்த சர்வதேச விருதுகள், இவ்விழாவின் போது திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தப்பட்டனர்.
இவ்விழாவில் 'சாவடி' திரைப்படத்தின் திரையிடல் நடைபெற்றதோடு, Deva Cine Production நிறுவனத்தின் அடுத்த படைப்பும், இத்தொடரின் இரண்டாவது கதையுமான "துவக்கு" திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி முன்னோட்டமும் (Teaser/Trailer) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














































































