SIVAKUMAR. M
மண்ணின் மைந்தர்களின் படைப்பாக, கோடீஸ்வரனின் இயக்கத்தில் நேற்று ‘விஜயா’ திரையரங்கில் திரையிடப்பட்ட 'தீராப்பிடி' திரைப்படம், அரங்கம் நிறைந்த காட்சிகளாக மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடியது
ரஞ்சன் சினிமாஸின் இரண்டாவது தயாரிப்பான இத்திரைப்படத்தைக் காண்பதற்கு, திரையரங்கிற்குப் பெருந்திரளான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.
அன்றாடக் குடும்ப வாழ்க்கையில் நிகழும் எளிய, சிறிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, மிகவும் யதார்த்தமான முறையில் நகர்கிறது 'தீராப்பிடி'யின் கதைக்களம்.
படத்தின் நாயகி கிருஷிகா, தன் கணவன் துஷி மயூரனுக்கு தேநீர் வழங்கும் காட்சி, ஆரம்பத்திலேயே கதையின் ஆழத்தை உணர்த்துகிறது. "ஒரு தேநீர் கோப்பையைக் கூட ஒழுங்கா போடத் தெரியலையே..." என்று கணவன் கடிந்துகொள்ளும் போது, துஷியின் அந்த கோபமான முகபாவமும், அதற்குப் பிரதிபலிப்பாக கிருஷிகா வெளிப்படுத்தும் சோகமும் ஏக்கம் நிறைந்த முகபாவனையும் மிக அற்புதம். அனுபவம் வாய்ந்த ஒரு நடிகையைப் போல கிருஷிகா தன் உணர்ச்சிகளைத் திரையில் நேர்த்தியாகக் கடத்தியுள்ளார்.
அதேபோல், இருட்டில் இருந்து எப்படி தேநீர் தயாரிப்பது என்று 'அந்நியன்' என்ற கதாபாத்திரப் பெயரில் குஜந்தன் பேசும் வசனங்களும், அவரது நடிப்பும் காட்சிகளுக்குச் சுவாரஸ்யம் சேர்த்துள்ளன.
தனுஷ்கா கர்ப்பிணிப் பெண்ணாக ஒரு காட்சியில் தோன்றி, நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்துபோகும் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது. ஒளிப்பதிவாளர் நெலு தனது நேர்த்தியான கேமரா கையாளுதலின் மூலம் இக்காட்சியைப் படத்தின் உச்சக்கட்ட காட்சியாக மாற்றியுள்ளார். எனினும், ஒரு கர்ப்பிணிப் பெண்ணை வீட்டில் தனியாக இருப்பதாகக் காட்டியதைத் தவிர்த்து, ஒரு துணையோடு காட்டியிருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்கும்.
கதாபாத்திரங்களை வடிவமைத்ததில் இயக்குனர் கோடீஸ்வரன் முத்திரை பதித்துள்ளார். குஜந்தனின் கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் ஒரு எதிர்மறையான வேடமாகப் பார்வையாளர்களை நம்பவைத்து, இறுதியில் அவர் கிருஷிகாவைத் தன் சொந்தச் சகோதரியாகப் பார்க்கிறார் என்று கதையைத் திருப்பிய விதம், பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் (Climax), இறந்துபோன தன் மனைவியின் பிறந்தநாள் என்று கூறி, மயானத்திற்குத் துஷியையும் கிருஷிகாவையும் அழைத்துச் செல்லும் அந்தத் தருணம், திரையரங்கில் இருந்த ரசிகர்களின் கண்களைக் குளமாக்கிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தென்னிந்திய சினிமாவின் அதீத ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, நம் நாட்டுத் தமிழ் சினிமாவை வர்த்தக ரீதியாக அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கூட்டுப் பொறுப்பு நம் பொதுமக்களின் கைகளில் தான் உள்ளது. நம் மண்ணின் மைந்தர்களின் இத்தகைய தரமான சினிமா முயற்சிகளை நாமும் மனதார ஊக்குவிப்போம், கரம் கொடுப்போம்! 'தீராப்பிடி' - தவறவிடக்கூடாத ஒரு குடும்பப் படைப்பு.






























































