பொழுதுபோக்கைத் தாண்டி மக்களுக்கு நீதி, அறம் மற்றும் வரலாற்றைக் கற்பிக்கும் உன்னத ஊடகமாகத் திகழும் கூத்துக்கலை, இன்றைய நவீன நாடக மேடைகளுக்கெல்லாம் முதன்மையான தாய்க் கலையாகும். தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியது. இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே "கூத்து" ஆகும்.
அந்த வகையில், மட்டக்களப்பு கல்லடி சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை அதிபரும், ஓய்வுநிலை அதிபருமான திருமதி தே. அருட்சோதி அவர்களின் தயாரிப்பிலும், விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையிலும் உருவான “ஆளுமையான ஔவையாள்” வடமோடி நாட்டுக்கூத்து மட்டக்களப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சங்க கால இலக்கிய வரலாற்றில் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே போர் மூளவிருந்த தருணத்தில், சங்க காலத்து இளம்பெண் ஔவையார் தேரேறிச் சென்று தூதுவராகச் செயல்பட்டார் என்பது சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் (பாடல் 95) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
சங்க காலத்து ஔவையார் வயதான பாட்டி அல்ல; அவர் அதியமானின் அரசவைக்குத் தேரில் அடிக்கடி வந்து சென்ற, இளமையும் துடிப்பும் மிக்க ஒரு பெண் ஆவார்.
காஞ்சிபுரத்தை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன், தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் மீது போர் தொடுக்க ஆயத்தமானான். போரினால் ஏற்படும் உயிர்ச் சேதத்தைத் தடுக்க, அதியமானின் வேண்டுகோளின்படி ஔவையார் தொண்டைமானிடம் தூது சென்று சமரசம் பேசினார். ஔவையாரின் ஆளுமையால் தொண்டைமான் போர் முடிவைக் கைவிட்டான். எனவே, தேரில் விரைந்து சென்று போரைத் தடுத்த தூதுவர் சங்க கால இளம்பெண் ஔவையாரே என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று உண்மையை மையமாக வைத்தே இக்கூத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கூத்தில் பாடசாலை மாணவி லக்ஷன்யா ஔவையார் வேடமேற்று, தனது அசாத்திய திறமையால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து, மக்களின் பேராதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார்.
தற்சமயம் மட்டக்களப்பு மாவட்டத்திலே கூத்துக்களைக் பழக்குவதற்கோ அல்லது ஆடுவதற்கோ ஆட்கள் இல்லாத ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது. கூத்துக்கலைஞர்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள், இந்தத் தொன்மையான கலைக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இதற்கான முறையான முன்னெடுப்புகளை மேற்கொண்டால் மட்டுமே, இந்த மாபெரும் கலையை நமது அடுத்த சந்ததிக்குக் கொண்டு சேர்க்க முடியும். நலிந்து வரும் கூத்துக்கலைஞர்களுக்கு ஆதரவளித்து, இக்கலையைக் காப்பதன் வாயிலாகவே தமிழர் பண்பாட்டை உலக அரங்கில் மிளிரச்செய்ய இயலும்.
மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த திருமதி தே. அருட்சோதி அவர்கள், தனது 7வது வயதிலிருந்தே கூத்துக்கலையில் ஈடுபட்டு வருகிறார். தற்காலத்தில் மாவட்டத்தில் லட்சத்தில் ஒருவர்கூட கூத்து ஆற்றுகையை அரங்கேற்ற முன்வராத சூழலில், திருமதி தே. அருட்சோதி அவர்கள் மனம் தளராமல், தொடர்ந்து கூத்து ஆற்றுகைகளைத் தயாரித்து அரங்கேற்றி வருவது மிகப்பெரிய சாதனையாகும்.
இது தொன்மையான தமிழ் கலைக்கு அவர் செய்யும் உன்னத சேவையாகும். அவரை கௌரவித்து, மேலும் ஊக்கப்படுத்தி, கூத்துக்கலை அழிந்து விடாமல் பேணவேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும்.





