SIVAKUMAR.M
மட்டக்களப்பு சிவாநந்த தேசிய பாடசாலையின் மாணவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு 97வது வருடத்தை முன்னிட்டு,பாடசாலையின் கல்வி வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகப் புதுப்பொலிவாக்கப்பட்ட பாடசாலை வாசிகசாலை (நூலகம்) இன்றைய தினம் (26.06.2026) காலை மாணவர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
மீள்வடிவமைக்கப்பட்ட இந்த நவீன வாசிகசாலையினை,ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் -மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ், பாடசாலை அதிபர் திரு. S.தயாபரன், உப அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட மாணவர் தலைவர் செல்வன்.ஏகலைவன் அட்சரன், மாணவர் ஊடகப் பிரிவு இணைப்பாளர் செல்வன்.ஜோ.ஜோபு ஆகியோர் இணைந்து நாடாவை வெட்டி,மங்கல விளக்கேற்றி முறைப்படி திறந்து வைத்தனர்.
சிவாநந்த வித்தியாலய வாசிகசாலையின் இந்த உயரிய மறுசீரமைப்புப் பணிக்கு,பிரித்தானிய பழைய மாணவர் சங்கக் கிளை மற்றும் வைத்தியர் ஷாஹித் அவர்கள் முழுமையான நிதி அனுசரணையும் பெரும் ஆதரவும் வழங்கிப் பங்களிப்புச் செய்த்துள்ளனர்
அத்துடன்,இந்த வாசிகசாலையை மிக நேர்த்தியாக மீள்வடிவமைப்பதில் பழைய மாணவர் திரு.சாய் ராஜன் அவர்களின் அயராத ஊக்கமும் உழைப்பும் அளப்பரியது என்பதுடன்,அது பெரிதும் பாராட்டத்தக்கதாகும்.
ஒரு பாடசாலையின் இதயமாக விளங்குவது அதன் நூலகமே ஆகும்.மாணவர்களின் பாடப்புத்தக அறிவுக்கு அப்பால்,உலக அறிவையும் சிந்தனைத் திறனையும் வளர்ப்பதற்கு ஒரு சிறந்த வாசிகசாலை இன்றியமையாததாகும்.
- இந்த நவீன வாசிகசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களின் பொது அறிவை விசாலமாக்க வழிவகுக்கும்.
- சுயகற்றல் வாய்ப்புகளையும், கூடுதல் குறிப்புகளையும் மாணவர்கள் இங்கு பெற்றுக்கொள்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் ஒட்டுமொத்தப் பரீட்சை சித்தி எய்தும் வீதம் (Pass Rate)கணிசமாக உயர்வடையும்.
- தேடலையும்,பகுத்தறியும் திறனையும் வளர்க்கும் இந்த வாசிகசாலை,மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்த ஆளுமைகளாகவும், சமூகப் பொறுப்புள்ள பிரஜைகளாகவும் உருவாக்கப் பேருதவி புரியும்.
சிவாநந்த வித்தியாலய மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு புதிய ஒளியை ஏற்றியுள்ள இந்த புதுப்பொலிவு பெற்ற வாசிகசாலை,மாணவர் சமூகத்திற்கு நீண்டகாலப் பயனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.





























































