பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) எதிராக கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கை ஊடாக கண்டனம்!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) எதிராக கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கை ஊடாக தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடத்தின் நிர்வாக விவகாரங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் மருத்துவ மற்றும் பல் மருத்துவ விஞ்ஞானங்களுக்கான நிலையியற் குழுவின் தலைவரால் நிர்வாக நெறிமுறைகளை மீறி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறைகேடான தலையீடுகளை கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TAEU) வன்மையாகக் கண்டிக்கிறது.

கல்விசார் பணியாளர்களை தெளிவான நிகழ்ச்சி நிரல் இன்றி உடனடியான  கூட்டங்களுக்கு அழைப்பதன் மூலமும், முக்கிய கல்விசார் நிர்வாக  அதிகாரிகளை புறக்கணித்து குறிப்பிட்ட சிலரை மாத்திரம் கூட்டங்களுக்கு  அழைப்பது மூலமும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய நிர்வாக நடைமுறைகளைப் பின் பற்றத் தவறியுள்ளது என கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது. 

மேலும், நிலையியற் குழுவின் தலைவரால் பீட விரிவுரையாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையிலான மற்றும் பொருருத்தமற்ற வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் சங்கம் ஆழ்ந்த கவலை வெளியிடுகிறது.

நல்லெண்ணத்தின் அடிப்படையில் முன் கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த போராட்ட நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த போதிலும், விரிவுரையாளர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் அழுத்தங்கள் காரணமாக, 2026 ஜூன் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சங்க உறுப்பினர்கள் வழமையான கடமைகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்து தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது. எனினும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில், இக்காலப்பகுதியில் இறுதியாண்டு பரீட்சைகளை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியையும் நிலைநிறுத்தப்பட்ட நடைமுறைகளையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மதிக்க வேண்டும் என்றும், கல்விசார் விரிவுரையாளர்களுக்கு மன உழைச்சலை ஏற்படுத்திய நடவடிக்கைக்காக மருத்துவ மற்றும் பல் மருத்துவ விஞ்ஞானங்களுக்கான நிலையியற் குழுவின் தலைவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் TAEU வலியுறுத்துகிறது. என கிழக்குப் பல் ககலக்கழக ஆசிரியர் சங்கத்தின் (TAEU) செயலாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.