இலங்கை முழுவதும் ஜூன் 19ல் வெளியாகும் “கூத்தாடி” திரைப்படம்: மட்டக்களப்பில் அண்ணாவிமார்களுக்குப் பொற்கிழி வழங்கி கௌரவிப்பு!

 
















SIVAKUMAR


புலம்பெயர் தேசத்து உறவான ஷெல்வின் தாஸ் அவர்களின் தயாரிப்பில், AZONWAY PICTURES இன் உருவாக்கமாக, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் வெளியீட்டில் உருவான கூத்தாடி முழுநீளத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி இலங்கை முழுவதும் 24 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று திரையரங்குகளிலும், செங்கலடி செல்லம் திரையரங்கிலும் இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

மட்டக்களப்பு மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷெல்வின் தாஸ் அவர்கள் ஒரு சிறந்த நடிகர், சினிமா தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு ஆளுமையாவார். புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும், பாரம்பரிய கிராமியக் கூத்து, கலை, நாடக மரபு மற்றும் தமிழ் பண்பாட்டு அடையாளங்களை  தாயகத்தில் பேணி ஊக்கமளித்து வருபவர்.

தமிழ் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, தமிழர்களின் தொன்மையான கூத்துக்கலையை மையப்படுத்தி, கலைஞர்களின் வாழ்வியலைப் பேசும் வகையில் இத்திரைப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அழியும் நிலையிலுள்ள கிராமியக் கூத்துக் கலைகளையும் நாடக மரபுகளையும் உலகெங்கும் வாழும் தமிழ் பிள்ளைகளிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் எனக் கருதி, தனது திரைப்படத்திற்கு “கூத்தாடி” என அவர் பெயரிட்டுள்ளார்.

கூத்துக்கலைக்கு உயிரூட்டும் அண்ணாவிமார்களைக் கௌரவிக்கும் நோக்குடன், மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட இரு சிரேஷ்ட அண்ணாவிமார்களுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி செங்கலடி செல்லம் திரையரங்கில் இத்திரைப்படம் வெளியிடப்படும் வேளையில், இக்கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

 விருது பெறுபவர்கள்: அண்ணாவியார் சின்னையா ஞானசேகரம் மற்றும் அண்ணாவியார் சீனித்தம்பி சிவபாதசேகரம்

 கலைஞர் ஒருவருக்கு 50,000.00 ரூபா வீதம், இருவருக்கும் மொத்தமாக 100,000.00 ரூபா பொற்கிழியும் நினைவுச் சின்னமும் வழங்கப்படவுள்ளது.

செல்லம் திரையரங்கு உரிமையாளர்  மோகன் கணபதிபிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக        ஆரையம்பதி கலைஞர், கலாபூஷணம் S. ரகுதாஸ் மற்றும்  
    கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன்  ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கல்லடி ஓய்வுநிலை அதிபர் திருமதி தே. அருட்சோதி அவர்களின் தயாரிப்பில், விரிவுரையாளர் து. கௌரீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் உருவான “ஆளுமையான ஔவையாள்” வடமோடி நாட்டுக்கூத்து, கல்லடி பெருநிலப்பரப்பைத் தாண்டி மட்டக்களப்பு மாவட்ட மக்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப்பட்டதொன்றாகும்.    இவ் வடமோடி நாட்டுக்கூத்துக்கு  அண்ணாவியார் சின்னையா ஞானசேகரம் சிறப்பாக பங்களிப்பு செய்திரு ந்தார். 

 மண்முனை பற்று ஆரையம்பதி அண்ணாவியார் சீனித்தம்பி சிவபாதசேகரம்   அவர்களின் நெறியாள்கையில்  உருவான     வள்ளி திருமணம்  என்ற நாட்டுக்கூத்து மண்முனை பற்றை தாண்டி மாவட்டம் முழுவதும் அரங்கேற்றப்பட்ட ஒன்றாகும் .

 இத்தகைய மரபுகளைத் தாங்கி நிற்கும் கலைஞர்களை ஷெல்வின் தாஸ் அவர்களின் அனுசரணையில் கௌரவிப்பது கலை உலகிற்குச் செய்யும் பெருமையாகும்.

தமிழ் பாரம்பரிய கிராமியக் கலைகளை  உலகெங்கும் கொண்டு சேர்க்க    சர்வதேசமெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தேசத்து உறவுகளை  கைகோர்க்க அழைக்கிறார் ஷெல்வின் தாஸ்.


 இந்த  கௌரவிப்பு நிகழ்விற்கு, Battimedia.lk ஊடக அனுசரணை (Media Sponsor) வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.