மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 15 நாள் வாண்மை விருத்தி பயிற்சி நிறைவு: சான்றிதழ்களும் வழங்கி வைப்பு!

 



























 

















































































கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய, முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்சார் ஆளுமையையும் வாண்மைத்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 15 நாட்கள் கொண்ட விசேட பயிற்சி செயலமர்வு வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

கடந்த மே மாதம் 20ஆம் திகதி ஆரம்பமான இச் செயலமர்வு, ஜூன் 10ஆம் திகதி வரை மட்டக்களப்பு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 48 முன்பள்ளி ஆசிரியர்களும், அதிபர்களும் கலந்துகொண்டு தமது ஆளுமைகளை மெருகூட்டிக்கொண்டனர்.

ஆசிரியர்களுக்குப் பயனுள்ள வகையில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன:

  "இப்பயிற்சி செயலமர்வின் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியமான 21ஆம் நூற்றாண்டு கல்வித்திறன்கள், நவீன கற்றல் - கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் வகுப்பறை முகமைத்துவம் ஆகிய துறைகளில் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பாடத்திட்டமிடல், கற்பித்தல் சாதனங்கள் தயாரிப்பு, மாணவர்களைச் சரியாக இனங்காணல், வழிகாட்டல் ஆலோசனை மற்றும் உள ஆரோக்கியம் போன்ற விடயங்கள் குறித்து ஆசிரியர்கள் தெளிவுபடுத்தப்பட்டனர். மேலும், செயல்நிலை ஆய்வு, தலைமைத்துவப் பண்புகள், நிகழ்ச்சி முகமைத்துவம், இணையப் பயன்பாடு மற்றும் அலுவலக ஆவணப் பேணல் திறன்கள் போன்ற வாண்மைத்துவ அபிவிருத்தி சார்ந்த முக்கிய அம்சங்களும் இப்பயிற்சியில் உள்ளடக்கப்பட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன."

  இப்பயிற்சிகளை மட்டக்களப்பு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் திருமதி S.D. றாகல், சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. M.P. ரவிச்சந்திரா, விரிவுரையாளர் திரு. K. தவச்சந்திரராசா மற்றும் கணினி வள நிலைய வளவாளர் திரு. S. பிரசாந்தன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு வழிநடத்தினர்.

பயிற்சியின் இறுதி நாளான நேற்று (10.06.2026), மட்டக்களப்பு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் திருமதி S.D. றாகல் தலைமையில் சான்றிதழ் வழங்கும் விழா இடம்பெற்றது.

பிரதம அதிதி: திருமதி. நிதர்ஷினி மகேந்திரகுமார் (மட்டக்களப்பு வலய பிரதி கல்விப் பணிப்பாளர்).

கௌரவ அதிதிகள்: திருமதி. அனுரேகா விவேகானந்தன் (முன்பள்ளிக்கான உதவி கல்விப் பணிப்பாளர்), திரு. எஸ். பரணிதரன் (வெளிக்கள உத்தியோகத்தர், மட்டக்களப்பு பாடசாலை பணியகம்).


மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ஆசிரியர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் குழுப்பாடல், கோலாட்டம், நாடகம், வில்லுப்பாட்டு மற்றும் நாட்டார் நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. தொடர்ந்து, பயிற்சியில் தாம் பெற்றுக்கொண்ட 15 நாள் அனுபவங்களை ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அதிதிகளின் உரையினைத் தொடர்ந்து, பயிற்சியை நிறைவு செய்த 48 பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.