SIVAKUMAR . M
மட்டக்களப்பு சீலாமுனை Young Star விளையாட்டு மைதானத்தில் Blooming Buds Pre-School ஏற்பாடு செய்திருந்த ‘சிறுவர் விற்பனைத் திருவிழா (Buds' Bazaar)’ கடந்த 2026.07.25 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை அதிபர் திருமதி காமலீட்டா தேவநம்பி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் முன்பிள்ளைப் பருவப் பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன் (வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சம்பிரதாய பூர்வமாக சிறுவர் சந்தையைத் திறந்து வைத்தார்.
விசேட அதிதிகளாக முன்னாள் அதிபர் திருமதி ஆர். கனகசிங்கம், ஓய்வுபெற்ற அதிபரும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான திரு. ஏ. எஸ். யோகராஜா, ESoft மட்டக்களப்பு கிளை முகாமையாளர் திருமதி சரண்யா லகபிரதன், மட்டக்களப்பு/வின்சென்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆசிரியரும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளருமான திரு. எஸ். சிவநிதி, மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய ஆசிரியர் திருமதி வி. நிரோகா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
நிகழ்வின் வரவேற்பு முறையே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வழக்கமாக மலர்களால் அணிவிக்கப்படும் மாலைகளுக்குப் பதிலாக, பல்வேறு காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட வரவேற்பு மாலைகள் அதிதிகளுக்கு அணிவிக்கப்பட்டன. அதேபோன்று, மங்கள விளக்கிற்குப் பதிலாக மரத்தால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு விளக்கு அமைக்கப்பட்டு, அதில் உண்மையான பழவகைகள் தொங்கவிடப்பட்டிருந்தமை நிகழ்வுக்கு தனித்துவமான அழகைச் சேர்த்தது. இவ்வாறான புதுமையான சிந்தனையை வடிவமைத்து நடைமுறைப்படுத்திய அதிபர் மற்றும் ஆசிரியர் குழு பாராட்டுக்குரியவர்களாகத் திகழ்ந்தனர்.
மேலும், சாதாரண விளையாட்டு மைதானம் ஒன்றை, மக்கள் நடமாட்டம் நிறைந்த சுறுசுறுப்பான சிறுவர் சந்தையாக மாற்றியமைத்திருந்த விதம் Blooming Buds முன்பள்ளி நிர்வாகத்தின் திட்டமிடல் திறன், ஒழுங்கமைப்பு மற்றும் படைப்பாற்றலுக்கு சிறந்த சான்றாக அமைந்தது.
அதிபர் திருமதி காமலீட்டா தேவநம்பி, ஒரு நவீன சூப்பர் மார்க்கெட்டை ஒத்த வகையில் ஒவ்வொரு விற்பனை நிலையையும் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். காட்சிப்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் தரமான, இயற்கையான மற்றும் உயிர்ப்புள்ள பொருட்களாக அமைந்திருந்தமை, சிறார்களுக்கு உண்மையான சந்தை அனுபவத்தை வழங்கும் நோக்கத்தை வெளிப்படுத்தியது.
சந்தையில் சிறுவர்களால் காய்கறிகள், பழங்கள், தேங்காய், கீரை வகைகள், மளிகைப் பொருட்கள், சத்துணவு வகைகள், பழச்சாறுகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பாரம்பரிய சிற்றுண்டிகள், இனிப்புப் பலகாரங்கள், பொதி செய்யப்பட்ட பொருட்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கதைப்புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
ஒவ்வொரு விற்பனை நிலையிலும் சிறுவர்கள் தாங்களே விற்பனையாளர்களாக மாறி, வாடிக்கையாளர்களை வரவேற்று, பொருட்களை அறிமுகப்படுத்தி, விலை கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு, மீதிப் பணத்தை வழங்கி, பேரம் பேசி, தன்னம்பிக்கையுடன் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றிய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிகழ்வின் வெற்றிக்கு சிறார்களின் பெற்றோர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. தமது பிள்ளைகளை உற்சாகப்படுத்திய அவர்கள், இரண்டு மணிநேரம் முழுவதும் சந்தையை உயிரோட்டமிக்க விற்பனை மையமாக மாற்றியிருந்தனர். மேலும், ஒவ்வொரு விற்பனைப் பிரிவிற்கும் ஏற்றவாறு சிறுவர்களுக்கு ஆடை அலங்காரங்களைச் செய்து அனுப்பியிருந்தமை, பெற்றோர்களின் அர்ப்பணிப்பையும் பிள்ளைகளின் முன்னேற்றத்தின் மீதான அக்கறையையும் வெளிப்படுத்தியது.
முன்பள்ளிக் கல்வி என்பது எழுத்துக்களையும் எண்களையும் கற்பிப்பதில் மட்டும் முடிவதல்ல; வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் அடித்தளத்தை அமைப்பதே அதன் உண்மையான நோக்கமாகும். இத்தகைய ‘சிறுவர் விற்பனைத் திருவிழா’ போன்ற அனுபவக் கற்றல் நிகழ்வுகள், குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு, உழைப்பின் பெருமை, மனித உறவுகளின் முக்கியத்துவம், பொறுப்புணர்வு, திட்டமிடல், நேர மேலாண்மை, சேமிக்கும் பழக்கம், பேரம் பேசும் திறன், முகாமைத்துவ ஆற்றல் மற்றும் நேர்மையான வர்த்தக நெறிமுறைகளை இயல்பாகவே கற்றுத்தருகின்றன. புத்தகங்களில் கற்ற அறிவு, வாழ்க்கையில் அனுபவமாக மாறும் போதே அது முழுமையான கல்வியாகிறது.
இன்று ஒரு சிறிய சந்தையில் தன்னம்பிக்கையுடன் ஒரு பொருளை விற்பனை செய்யும் குழந்தை, நாளை ஒரு நிறுவனத்தை வழிநடத்தும் தலைவராகவும், சமூகப் பொறுப்புள்ள தொழில்முனைவோராகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் சிறந்த குடிமகனாகவும் உருவாகலாம். அந்த எதிர்காலத்தின் முதல் விதையை விதைக்கும் அர்த்தமுள்ள கல்விச் செயல்பாடாகவே Blooming Buds முன்பள்ளியின் இந்த ‘சிறுவர் விற்பனைத் திருவிழா’ அமைந்திருந்தது.















































































