மட்/ மட்டக்களப்பு மேற்கு கற்சேனை விஷ்ணு வித்தியாலய அதிபர் திரு. க. சிறிதரன் அவர்கள் 36 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

 





















மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/கற்சேனை விஷ்ணு வித்தியாலயத்தில் 9 வருடங்கள் அதிபராகச் சேவையாற்றிய திரு. க. சிறிதரன் அவர்கள், கடந்த 2026.10.02 ஆம் திகதியுடன் தனது சுமார் 36 வருடகால நீண்ட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர்    முதன்முறையான ஆசிரியர் நியமனத்தைப் பெற்று, தனது சொந்த ஊரான மட்/மமே/அரசடித்தீவு விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் கணித பாட ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் சுமார் 16 வருடங்கள் திறம்படக் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து, மட்/பட்/களுமுந்தன்வெளி கஜமுகா வித்தியாலயம், மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் மற்றும் மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும் கணித பாட ஆசிரியராகச் சேவையாற்றி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார்.

கடந்த 01.11.2017 அன்று மட்/மமே/கற்சேனை விஷ்ணு வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்ற இவர், பாடசாலையின் கல்வி மற்றும் நிர்வாக மட்டங்களில் பல வரலாற்றுச் சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்:

2017 ஆம் ஆண்டில் 44% ஆகக் காணப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை, இவர் அதிபராகப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டே (2018) 100% ஆக உயர்த்திச் சாதனை படைத்தார். இவரின் ஓய்வு ஆண்டான 2026 ஆம் ஆண்டிலும் இப் பாடசாலை 100% சித்தி சதவீதத்தைத் தக்கவைத்துக் கொண்டதுடன், வெட்டுப்புள்ளிக்கு மேல் ஒரு மாணவன் சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளான்.

தரம் 1 முதல் 9 வரை மாத்திரமே இயங்கிவந்த இப் பாடசாலையை, 2020 ஆம் ஆண்டு தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். இதன் பலனாக, 2021 ஆம் ஆண்டு முதன்முறையாக க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தொடர்ச்சியாக 2 வருடங்கள் 100% சித்தியைப் பெற்றுத் தந்தனர்.

இவரது சிறந்த வழிகாட்டல் மற்றும் திறமையான நிர்வாகத்தின் கீழ், பாடசாலை உற்பத்தித்திறன் போட்டிகளில் 3 விருதுகளை வென்று சாதனை படைத்தது.

 சுமார் 36 வருட கால அரச சேவையில், நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடமையாற்றி, கிராமப்புற மாணவர்களின் கல்வி மேன்மையடைவதற்காக உழைத்த திரு. க. சிறிதரன் அவர்களின் சேவையைப் பாராட்டி, பாடசாலைச் சமூகமும் பிரதேச மக்களும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.