மட்டக்களப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு: 'இமு' படத்தின் பெயர் ‘இரு முகம்’ என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

 


 
 














































ஈழத்துத் திரையுலகில், குறிப்பாக மட்டக்களப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘#இமு’ என்ற குறியீட்டுப் பெயரிலான முழுநீளத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ‘இரு முகம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 9-ஆம் திகதி மட்டக்களப்பு, கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் படத்தின் படப்பிடிப்பு சம்பிரதாயப்பூர்வமாகத் தொடங்கியது. தயாரிப்பாளர் ரோஜஸ் டி சில்வாவின் தாயார் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்த நாள்முதலே, 'இமு' என்பதன் முழுமையான பெயர் என்னவாக இருக்கும் என்பதை அறிய தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இப்படத்தின் தலைப்பும் முதற்பார்வையும் (First Look) இயக்குனர் கீ. கிஷாந்தின் அவர்களால் வெளியிடப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு, ‘இரு முகம்’ படத்தின் பெயர் பதாகையைத் திரைநீக்கம் செய்து வைத்தார். பிரம்மாண்ட மேடை அலங்காரங்கள் மற்றும் ஆடம்பரங்களைத் தவிர்த்து, சாமானிய மக்களையும் சென்றடையும் வகையில் பொது விடுமுறை நாளில் மக்கள் கூடும் காந்தி பூங்காவில் இந்நிகழ்வை நடத்தியது இயக்குநரின் தனித்துவமான ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு படக்குழுவினருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

"இலங்கையில், குறிப்பாக தமிழர் தாயகப் பகுதிகளில் ஒரு தமிழ் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவது என்பது நெருப்பாற்றில் நீந்துவதைப் போன்ற சவாலான காரியமாகும்" என்று குறிப்பிடும் கலை ஆர்வலர்கள், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் உருவாகும் இத்தகைய முயற்சிகளுக்கு இலங்கையிலுள்ள தமிழ் மக்களும் புலம்பெயர் உறவுகளும் முழு ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தென்னிந்திய சினிமாவின் ஆதிக்கத்தில் இருக்கும் இலங்கைத் தமிழ் ரசிகர்களை நமது சொந்த மண்ணின் படைப்புகளை நோக்கி மீட்டெடுக்க, கிஷாந் போன்ற ஆளுமைமிக்க இயக்குநர்களின் இத்தகைய முயற்சிகள் ஈழத்துச் சினிமா வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.