மட்டக்களப்பு கல்லடி டெங்கு ஒழிப்பு சிரமதானத்தின் போது அதிர்ச்சி: பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கசிப்பு போத்தல்கள் மீட்பு.




 


























 சிவகுமார்  .M

மட்டக்களப்பு மாவட்டம் டெங்கு அபாய சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, அதிக ஆபத்துள்ள (Hotspot) பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இன்று (18.07.2026) பாரிய சிரமதானப் பணி ஒன்று நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் (171C) கிராம உத்தியோகத்தர் திருமதி. நவஜீவிகா வேந்தன் தலைமையில் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் திருமதி. சுகந்தி தயாகரன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தட்சணாமூர்த்தி முகுந்தன் ஆகியோரின் பங்களிப்புடன், கல்லடி வேலூர் பகுதி இளைஞர்களும் இணைந்து தீவிர துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் மழைக்காலத்தில் டெங்கு பரவலைத் தடுக்கும் நோக்கில், கல்லடி வேலூர் பகுதியிலுள்ள அரச காணியொன்றை இளைஞர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதன்போது, அங்குள்ள புதர்களுக்குள் இரு வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, தலா 25 லீட்டர் கொள்ளளவு கொண்ட சட்டவிரோத வடிசாராய (கசிப்பு) போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன், மற்றுமொரு இடத்தில் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் பரல் ஒன்று எரியூட்டப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டது.

கல்லடி வேலூர் பிரதேசத்தில் நீண்டகாலமாக கசிப்பு பாவனை மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக காவல்துறையினருக்கும் கிராம உத்தியோகத்தருக்கும் தொடர்ந்து முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சட்டவிரோத செயலுக்கு எதிராக கடந்த காலங்களில் இப்பகுதி மக்களால் பல்வேறு போராட்டங்களும், விழிப்புணர்வு ஊர்வலங்களும் நடத்தப்பட்டிருந்தன.

உயிர்கொல்லியாகவும், உடல்நலத்திற்கு கடும் கேடு விளைவிக்கக்கூடியதாகவும் உள்ள இந்த சட்டவிரோத வடிசாராயப் பாவனை, தற்போதும் இப்பகுதியில் தடையின்றி நீடிக்கிறது என்பதை இன்றைய சம்பவம் நிரூபித்துள்ளதாகக் கூறும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இப்பிரதேசத்தில் கசிப்பு பாவனையை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணியின் போது தற்செயலாக மீட்கப்பட்ட இந்த சட்டவிரோத கசிப்பு போத்தல்களை, கிராம உத்தியோகத்தர் திருமதி. நவஜீவிகா வேந்தன் உடனடியாக காத்தான்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளார்.
 டெங்கு ஒழிப்புப் பணியை மேற்கொண்டு, அதேவேளையில் கிராமத்தை சீரழிக்கும் சமூக விரோத செயலையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த கிராம உத்தியோகத்தர் மற்றும் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிரதேச பொதுமக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.