
சிவகுமார் .M
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், வைத்தியசாலையின் மத்தியாஸ் வீதியில் (Matthias Road) புதிய நுழைவாயில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்களால் இந்த புதிய நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் நாளாந்தம் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் இந்த வைத்தியசாலைக்கு வந்து செல்கின்றனர். எனினும், கடந்த பல வருடங்களாக நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் என அனைவரும் ஒரே நுழைவாயிலைப் பயன்படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்பட்டது. அத்தோடு, அவசர நோயாளர் காவு வண்டிகளும் (Ambulance) அதே நுழைவாயில் ஊடாகவே செல்ல வேண்டியிருந்ததால், வைத்தியசாலை பிரதான நுழைவாயில் பகுதி எப்போதும் கடுமையான நெரிசலும் பதற்றமும் நிறைந்ததாகவே காணப்பட்டு வந்தது.
சமீபத்தில் புதிய பதில் பணிப்பாளராகப் பதவியேற்ற வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்கள், பொதுமக்களின் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகாணும் பொருட்டு, மத்தியாஸ் வீதியில் புதிய நுழைவாயில் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன்மூலம், நோயாளிகளைப் பார்வையிடும் நேரங்களில் (Visiting Hours) வரும் பொதுமக்கள் எவ்வித நெரிசலுமின்றி, பாதுகாப்பாகவும் விரைவாகவும் வைத்தியசாலைக்குள் சென்று வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நுழைவாயில் பார்வையாளர் நேரங்களில் மாத்திரம் திறந்திருக்கும் எனவும், அதற்கேற்ப அங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு. தனஞ்செயன், சுகாதார மேம்பாடு, உணவு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் அச்சுதன் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உதவிப்பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்புதிய நுழைவாயில் திறக்கப்பட்டதன் மூலம் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் நெரிசல் குறைவடைந்து, அவசர சிகிச்சைப்பிரிவு சேவைகள் எவ்வித தடையுமின்றி சீராக இயங்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் நிம்மதி வெளியிட்டுள்ளனர்.


























