ஊடகத்துறையை வலுப்படுத்தும் “SLIMFA மீடியா மாநாடு 2026 கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை மற்றும் இந்திய
ஊடகவியலாளர்களுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளையும், தொழில்முறை ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை – இந்திய ஊடக நட்புச் சங்கத்தினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் “SLIMFA மீடியா மாநாடு 2026” கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் ஊடகச் சூழல் குறித்து இரு நாட்டு ஊடகவியலாளர்களும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளை உருவாக்கவும் இந்த மாநாடு ஒரு முக்கிய தளமாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு மாநாடானது “மாறிவரும் உலகில் பொருத்தமுடையதாக இருத்தல்” (Staying Relevant in a Changing World) என்ற முக்கிய கருப்பொருளின் (Theme) கீழ் நடத்தப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊடகத் துறை பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் தற்போதைய காலகட்டத்தில், ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப ஊடுருவல்கள், மாறிவரும் வாசகர்கள்/பார்வையாளர்களின் நடத்தை மாற்றங்கள் மற்றும் ஊடகங்களின் நம்பகத்தன்மையைப் பேணுதல், போலிச் செய்திகளுக்கு மத்தியில் உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களைச் சரிபார்த்து வெளியிடுவதன் முக்கியத்துவம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது

புதிய தொழில்நுட்ப சவால்களுக்கு முகம் கொடுக்கும் அதேவேளை, துல்லியம், சுதந்திரம், பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.