மட்டக்களப்பு கல்லடி பொனிங்ரன் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா - 2026 வெகுவிமரிசையாக நடைபெற்றது






 








































































































 

 


SIVAKUMAR.M

மட்டக்களப்பு கல்லடி பொனிங்ரன் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா கடந்த 2026.07.04 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கல்லடி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி G.S. லூக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை, உதவித் தலைமை ஆசிரியர் செல்வி பிரேமி மிகச்சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் திரு. சிவம் பாக்கியநாதன் அவர்கள் பிரதம அதிதியாகவும், உளவள ஆலோசகரும் பயிற்றுவிப்பாளருமான திரு. M. புவிராஜா அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர். மேலும், சிறப்பு அதிதிகளாக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. தி.மேகராஜா, கல்லடி விநாயகர் வித்தியாலய அதிபர் திருமதி விநோதன், விவேகானந்த மகளிர் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திருமதி H. திலகவதி மற்றும் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியர் திருமதி இந்திராணி புஸ்பராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறைவணக்கம், வரவேற்புரை, கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, சிறார்களின் சத்தியப்பிரமாணம் மற்றும் கண்கவர் அணிநடை மரியாதையுடன் விளையாட்டுப் போட்டிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.

பாலர் பாடசாலைச் சிறார்களின் வயதுப் பிரிவுகளுக்கு ஏற்ப போட்டிகள் சுவாரசியமாக நடத்தப்பட்டன. 3 வயதுச் சிறார்களுக்கான கட்டை பொறுக்குதல், 4 வயதுப் பெண்களுக்கான நிறக்கொடி தெரிதல், 4 வயது ஆண்களுக்கான பழங்கள் தெரிதல் போன்ற போட்டிகளும், 5 வயது ஆண்களுக்கான பெண்கள் போல் உடை அணியும் போட்டி மற்றும் 5 வயதுப் பெண்களுக்கான ஆண்கள் போல் உடை அணியும் போட்டி ஆகியனவும் இடம்பெற்றன. இவை தவிர ஓட்டப்போட்டி, சிறார்களின் கூட்டு உடற்பயிற்சி மற்றும் விநோத உடைப் போட்டிகளும் பார்ப்போரைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.

சிறார்களின் போட்டிகளைத் தொடர்ந்து, பாலர் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விசேட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு விழா உற்சாகமடைந்தது. நிகழ்வின் இடையே பிரதம அதிதி திரு. சிவம் பாக்கியநாதன் மற்றும் கௌரவ அதிதி திரு. M. புவிராஜா ஆகியோர் பாலர் பருவக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் கலந்துகொண்ட அனைத்துச் சிறார்களுக்கும் அதிதிகளால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இறுதியாக உதவித் தலைமை ஆசிரியர் செல்வி பிரேமி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. இவ்விளையாட்டு விழாவில் சிறார்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறார்களை ஊக்கப்படுத்தினர்.

 

பாலர் பருவச் சிறார்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு விளையாட்டுப் போட்டிகள் மிக அத்தியாவசியமானவை.

 பாலர் பருவச் சிறார்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு விளையாட்டுப் போட்டிகள் மிக அத்தியாவசியமானவை. ஓடுதல், குதித்தல் மற்றும் பொருட்களைக் கையாளுதல் போன்ற செயல்பாடுகள் சிறார்களின் தசை வளர்ச்சிக்கும், கை-கண் ஒருங்கிணைப்பிற்கும் பெரிதும் உதவுகின்றன. மேலும், மற்ற பிள்ளைகளுடன் இணைந்து விளையாடும் போது பகிர்ந்துகொள்ளுதல், விட்டுகொடுத்தல் மற்றும் குழுவாகச் செயல்படும் தலைமைத்துவப் பண்புகள் போன்ற சமூகத் திறன்கள் அவர்களிடம் இயல்பாகவே வளர்கின்றன. 

போட்டிகளில் வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்கும் மனப்பக்குவமும், தோல்வியிலிருந்து மீண்டு வரும் மன உறுதியும் (Resilience) இத்தகைய விளையாட்டுகள் மூலம் சிறுவயதிலேயே விதைக்கப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, மேடைகளிலும் மைதானங்களிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் போது சிறார்களின் கூச்ச சுபாவம் நீங்கி சுயநம்பிக்கை அதிகரிப்பதுடன், அவர்களின் ஆளுமையும் பலப்படுகிறது.