சிவகுமார் .M
மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயத்திற்கும், திருகோணமலை இந்து கல்லூரிக்கும் இடையிலான 31ஆவது 'பொன் அணிகளின் சமர்' கிரிக்கெட் போட்டி நாளை (2026.07.04) திருகோணமலை இந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக சிவாநந்த வித்தியாலய கிரிக்கெட் அணியினர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பயிற்றுவிப்பாளர், விவாத அணியினர் மற்றும் பேண்ட் வாத்தியக் குழுவினர் உள்ளடங்கலாக சுமார் 150 பேரைக் கொண்ட குழுவினர் இன்று திருகோணமலை நோக்கிப் பயணமாகின்றனர்.
இவர்களது போக்குவரத்துச் செலவுகளுக்காக, அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம் சார்பாக 100,000 ரூபா நிதியுதவி இன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்நிதியினை அன்னை லீலாவதி பவுண்டேசன் அமைப்பினர், சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர் ஜே. சாயி ராஜனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
இந்நிகழ்வில் அன்னை லீலாவதி பவுண்டேசன் சார்பாக அதன் செயலாளர் திருமதி. தர்சினி ஹரிகரன், திரு. க. கபிலேந்திரன், திரு. ச. பிறேமானந்தன் ஆகியோரும், சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் உபதலைவர் திரு. ஜெ. சாயிராஜன், திருமதி. திலகவதி ஹரிதாஸ் மற்றும் திரு. ச. சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ் நிதி அனுசரணையை வழங்கியமைக்காக பழைய மாணவர் சங்கமும் பாடசாலை சமூகமும் அன்னை லீலாவதி பவுண்டேசன் அமைப்பிற்குத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளன.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் உன்னத எண்ணக்கருவில் தோற்றம் பெற்று, பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட சிவாநந்த வித்தியாலயம் எமது தேசிய சொத்தாகும். எமது மாணவர்கள் கல்வியில் மட்டுமன்றி, விளையாட்டுத் துறையிலும் மாவட்ட, மாகாண மட்டங்களைத் தாண்டி தேசிய மட்டத்திலும் பங்குபற்றி வெற்றியீட்ட வேண்டும்; சகல துறைகளிலும் உச்சம் தொட்டு பாடசாலையின் பெயரை தேசிய ரீதியில் நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைவரதும் இலக்காகும்.
எனவே, மாணவர்களை ஊக்குவித்து, அவர்களுக்குப் பேராதரவு வழங்கவேண்டும் என்பதே பாடசாலை சமூகத்தினதும் பழைய மாணவர் சங்கத்தின் எதிர்பார்ப்பாகும்









