மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி அவர்களுக்கு பிரியாவிடை கௌரவிப்பு!

 












































































மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கான பாராட்டு மற்றும் விடைபெறும் நிகழ்வு, இன்று (27.06.2026) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

சுகாதாரத்துறையில் அவர் ஆற்றிய நீண்டகால சேவையை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், சுகாதார அமைச்சின் பணியாளர் நாயகம் அசேல குணவர்த்தன அவர்கள் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.

திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் முப்பது வருடங்களுக்கும் மேலாக சுகாதாரத்துறையில் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக, கடந்த எட்டு வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பொறுப்பேற்று, அதன் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் மருத்துவச் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் போது, அவரது அர்ப்பணிப்புடன் கூடிய சேவையைப் பாராட்டி வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களினால் உணர்வுபூர்வமான வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அவருக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு, சிறப்பு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு, அவரது பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பிரம்மாண்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கிய ஆவணப் புத்தகமும் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது.

இவ்விழாவில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி. சுகுணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி மைத்திலி பாத்லட் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.