மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிய ஆசிரியர் பயிலுனர்கள் வரவேற்பு: 200 மாணவர்கள் இணைவு.


 


























































































SIVAKUMAR.M

பாடசாலை கற்பித்தல் சேவைக்குள் நுழையவுள்ள புதியவர்களுக்குத் தொழிலுக்கு முந்திய முறையான ஆசிரியர் பயிற்சியை (Pre-service Teacher Training) வழங்குவதற்காகவே தேசிய கல்வியற் கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த வகையில், உயர்தர (A/L) பரீட்சை முடிவுகள், Z-Score புள்ளி விபரங்கள் மற்றும் நேர்முகப் பரரீட்சை ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2025–2027 கல்வியாண்டுக்கான (27 ஆவது தொகுதி) 200 புதிய ஆசிரியர் பயிலுனர்கள் நேற்று உத்தியோகபூர்வமாகக் கல்லூரியினுள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

 இக்கல்லூரியில் கற்பித்தல் துறைக்கான 3 வருட கால 'கற்பித்தலில் தேசிய டிப்ளோமா' (National Diploma in Teaching) பாடநெறி வழங்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு தங்குமிடப் பயிற்சியாக (Residential Training) 2 வருடங்கள் கல்லூரியிலும், இறுதி ஒரு வருடம் பாடசாலைகளில் நேரடி ஆசிரியர் பயிற்சியாகவும் (Internship) இம்மாணவர்கள் பயிற்சியினைப் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழி மூல ஆரம்பக் கல்வி மற்றும் ஏனைய பாடங்களுக்கான தகுதிவாய்ந்த ஆசிரியர்களை உருவாக்குவதில் 31 வருடங்களுக்கும் மேலாக வரலாற்றுப் பங்காற்றி வரும் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரிக்கு, புதிய ஆசிரியர் பயிலுனர்களை வரவேற்கும் திசைமுகப்படுத்தல் நிகழ்வு நேற்று (25.06.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பீடாதிபதி த. கணேசரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில், பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பேண்ட் வாத்திய முழக்கத்துடன் கல்லூரிச் சமூகத்தினால் புதிய ஆசிரியர் பயிலுனர்கள் கௌரவமாக பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தமிழர் பாரம்பரிய முறைப்படி மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து மும்மத வழிபாடுகளும், கல்லூரித் சிரேஷ்ட மாணவிகளின் சிறப்பான வரவேற்பு நடனமும் இடம்பெற்றன.

கல்வி மற்றும் தர உறுதிப்பாட்டுப் பிரிவின் விரிவுரையாளரும் ஒருங்கிணைப்பாளருமான பி. சகாதேவன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், உப பீடாதிபதிகளின் ஆக்கப்பூர்வமான உரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து, புதிய ஆசிரியர் பயிலுனர்களின் ஆண், பெண் பிரதிநிதிகள் தங்களது அனுபவங்களை விழா மேடையில் பகிர்ந்து கொண்டனர். மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள், தங்களது பிள்ளைகள் கடினமான சூழ்நிலைகளை வென்று இந்த நிலைக்கு முன்னேறிய நெகிழ்ச்சியான அனுபவங்களை மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பகிர்ந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது.

பீடத் தலைவர், விரிவுரையாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் முதலாம், இரண்டாம் வருட மாணவர்கள் எனப் பலரது முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வு நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.