மட்டக்களப்பு: மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வருடாந்த விளையாட்டு விழா -2026

 


"திறமையால் வளர்ந்து விளையாட்டால் இணைவோம்" எனும் மகுட வாசகத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடாத்திய உத்தியோகத்தர்களுக்கிடையிலான வருடாந்த கலாசார இல்ல விளையாட்டு விழா - 2026, கடந்த சனிக்கிழமை (20.06.2026) மட்டக்களப்பு எவபர் மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

 

 


 

 

 





 

 









 

 







 

 









 


























































SIVAKUMAR.M


மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு. வ.வாசுதேவன் அவர்கள் முதன்மை அதிதியாகவும், மட்டக்களப்பு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ்.ஸ்ரீகாந் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர். சிறப்பு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. கே.மோகனதாசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விளையாட்டு விழாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நான்கு இல்லங்களாகப் பிரிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இல்லங்களின் விபரம் பின்வருமாறு:

தெய்வீக நட்சத்திரங்கள் இல்லம்: திரு. லோ.தீபாகரன் (இல்லத் தலைவர்), திரு. ந.மயூரன் (விளையாட்டுத் தலைவர் - அபிவிருத்தி உத்தியோகத்தர்
.மின்னும் வைரங்கள் இல்லம்: வே.பிறைசூடி (இல்லத் தலைவர் - முகாமைத்துவ பணிப்பாளர்), பா.தனபாலன் (விளையாட்டுத் தலைவர் - சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்).
 அதிசய மலைகள் இல்லம்: மா.மதன் (இல்லத் தலைவர் - கிராம உத்தியோகத்தர்), ஜெ.ஜொனேல்லா மாறி (விளையாட்டுத் தலைவர் - சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்).
  உயிரூட்டும் மலர்கள் இல்லம்: யோ.தனுராஜ் (இல்லத் தலைவர் - கிராம உத்தியோகத்தர்), பி.பிரசாந் (விளையாட்டுத் தலைவர் - அபிவிருத்தி உத்தியோகத்தர்).

மாலை 2.30 மணிக்கு அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டு, கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் தேசியகீத இசைப்பைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் மற்றும் ஒலிம்பிக் தீபமேற்றல் ஆகியன இடம்பெற்றன. தொடர்ந்து உத்தியோகத்தர்களின் கண்ணைக் கவரும் வரவேற்பு நடனம் மற்றும் கம்பீரமான அணிநடை (March Past) என்பன நடைபெற்றன.

தலைமையுரையையும் வரவேற்புரையையும் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும், விறுவிறுப்பான கலப்பு அஞ்சலோட்டமும் மைதானத்தை உற்சாகப்படுத்தின.

 வழக்கமான போட்டிகளுடன் இணைந்து, 'மனதால் ஊடுருவல்' (Secret Game - 1), மெதுவான சைக்கிள் ஓட்டம், 'இருட்டுக்குள் இலக்கை அடைதல்' (Secret Game - 2), 'குறைந்த பரப்பில் கூடியவர்கள்' (Secret Game - 3) போன்ற பல சுவாரசியமான போட்டிகள் உத்தியோகத்தர்களுக்கு இடையே நடத்தப்பட்டன. அத்துடன், முட்டி உடைத்தல், நிலை தடுமாறுதல், தொப்பி மாற்றுதல், விநோத உடை நிகழ்வு மற்றும் அழகராணி நிகழ்வு என்பனவும், உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பிரத்தியேக விளையாட்டுக்களும் விழாவிற்கு மேலும் வண்ணம் சேர்த்தன.

போட்டிகளின் நிறைவில் இல்ல அலங்கரிப்புகள் அதிதிகளால் பார்வையிடப்பட்டு மதிப்பிடப்பட்டன. தொடர்ந்து அதிதிகளின் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன், போட்டிகளில் வெற்றி பெற்ற திறமையாளர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இறுதியாக, கலாசார உத்தியோகத்தர் திருமதி ராதிகா கருணாகரன் அவர்களின் நன்றியுரையுடன், உத்தியோகத்தர்களின் ஒற்றுமையையும் திறமையையும் பறைசாற்றிய 2026ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா இனிதே நிறைவுற்றது.

இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.