மட்டக்களப்பு: மண்முனைப்பற்றில் சர்வதேச புகைத்தல் ஒழிப்பு கொடிதின நிகழ்வு: வறிய மாணவர்களுக்கும் குடும்பங்களுக்கும் காசோலைகள், வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

 
















































































































மண்முனைப்பற்று சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளினால் சர்வதேச புகைத்தல் ஒழிப்பு கொடி விற்பனை மூலம் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து, வறிய குடும்பங்களின் (C.B.O அங்கத்தவர்கள்) மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிக்கான காசோலைகள் வழங்கும் விசேட நிகழ்வு நேற்று (22) திங்கட்கிழமை நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில், பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.30 மணிக்கு இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

கொடி விற்பனை மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு மிகவும் தேவையுடைய குடும்பங்களுக்குப் பின்வரும் உதவிகள் இதன்போது உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன:

  • 75 வறிய மாணவர்களுக்குப் பாடசாலை புத்தகப் பைகளும், 50 மாணவர்களுக்குப் பாடசாலை பாதணிகளும் (Shoes) வழங்கி வைக்கப்பட்டன.
  • வறிய மக்களின் வீடு திருத்தப் பணிகளுக்காக, தலா 200,000.00 ரூபா பெறுமதியான 06 காசோலைகள் கையளிக்கப்பட்டன.
  • : மலசலகூடத் திருத்த வேலைகளுக்காக, தலா 15,000.00 ரூபா பெறுமதியான 08 காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளருடன் இணைந்து பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ. சுதர்சன், நிருவாக உத்தியோகத்தர் வே. தவேந்திரன், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளரும் தலைமையாளருமான க. உதயகுமார், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சா. ஆனந்தமோகன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான சோ. தமிழ்வாணி, கா. நவரஞ்சன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர், சமுதாய அடிப்படை அமைப்புகளின் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என சுமார் 400க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

புகைத்தல் ஒழிப்பு போன்ற நற்பணிகள் மூலம் சமூகத்தில் சேகரிக்கப்படும் நிதி, மீண்டும் அதே சமூகத்தில் உள்ள நலிவடைந்த மக்களின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை இப்பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.