SIVAKUMAR.M
மட்டக்களப்பு, கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தருமுதாஸ் தலைமையில் இடம் பெற்றது , கௌரவிப்பு நிகழ்வு , பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலைச் சமூகத்தினரால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 115 மாணவிகளில் 94 பேர் உயர்தரம் கற்பதற்கான தகுதியினைப் பெற்றுள்ளனர். இதன்படி, பாடசாலையின் சித்தி வீதம் 86.1% ஆகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பரீட்சையில் 07 மாணவிகள் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட (9A) சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் பின்வருமாறு:
கேதீஸ்வரன் அஜிர்த்தனா
விஜேந்திரன் நிதுஷா
ரத்தினசிங்கம் துஷ்யா
கண்ணன் பிருந்திகா
கமலராஜா ஷர்மா ஹரிணி
தனஞ்செயன் ஹம்சிகா
கலைச்செல்வன் அஷ்விகா
மேலும், 8A, B சித்தியை மாணவி ஜி. ஹர்சாயினியும், 8A, C சித்தியை மாணவி டீ. சர்விகாவும் பெற்றுள்ளனர். அத்தோடு, 7A, 2B சித்திகளை மூன்று மாணவிகளும், 7A, B, C சித்திகளை இரண்டு மாணவிகளும், 7A, 2C சித்தியை ஒரு மாணவியும் பெற்று விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
கல்வியில் மட்டுமன்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சாதனை படைத்த மாணவிகளுக்கும் இவ்விழாவில் கௌரவம் அளிக்கப்பட்டது. மாகாண மட்டத் தமிழ் தினப் போட்டிகளில் நாட்டிய நாடகம், நடனம், இலக்கிய விமர்சனம், இசை போன்ற நிகழ்வுகளில் பங்கேற்ற 12 மாணவிகளும், மாகாண மட்ட ஹொக்கிப் போட்டியில் பங்கேற்ற 15 மாணவிகளும் கௌரவிக்கப்பட்டனர். விசேடமாக, சிதம்பர கணிதப் போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கத்தை வென்ற மாணவி ஜே. யதுஷனியும் விழா மேடையில் பாராட்டப்பட்டார்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் சிறப்பான பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் எமது ஊடகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு, இம்முறை சித்தியடையாத மாணவிகள் எவ்வித மனத்தளர்ச்சியும் அடைய வேண்டாம். தோல்விகளே வெற்றிக்கான முதல் படிகள் என்பதை உணர்ந்து, மீண்டும் ஊக்கத்தோடு கற்று அடுத்த வருடம் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறோம்.
அன்பான மாணவர்களே, கல்வி என்பது நாம் பெறும் சான்றிதழ்களில் மட்டும் இல்லை; அது நமது சிந்தனையை, ஆளுமையை, எதிர்காலத்தை செதுக்கும் உன்னத ஆயுதம். "கேடில் விழுச்செல்வம் கல்வி" என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே செல்வம் நீங்கள் கற்கும் கல்வி மட்டுமே. இன்று நீங்கள் பெற்ற இந்த வெற்றி, உங்களின் நீண்ட பயணத்தின் ஆரம்பமே. இன்னும் பல சிகரங்களை நீங்கள் தொட வேண்டும். அதேபோல, சறுக்கல்களைச் சந்தித்தவர்கள் அதை அனுபவமாக மாற்றுங்கள். கல்வியை மதித்து, முழு ஈடுபாட்டோடு தொடர்ந்து படியுங்கள். உங்கள் அறிவும், நற்பண்புகளுமே இந்தச் சமூகத்தில் உங்களை மிகச்சிறந்த மனிதர்களாக உயர்த்தும். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக அமைய வாழ்த்துகள்!
Battimedia.lk





































































