சிவகுமார்.M
முத்தமிழ் வித்தகரும், ஈழத்தின் தவப்புதல்வருமான சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் மிகச் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.
கடந்த 2026 ஜூலை 19 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணியளவில், மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் சதுக்கத்திலுள்ள அவரது கருங்கற்சிலை பீடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 'சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை' இச்சிறப்பு நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
ராமகிருஷ்ண மிஷன் சுவாமி பிரம்மஜானந்தா ஜீ மகராஜ் அவர்களின் ஆன்மீக முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சுவாமிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியம் அவர்கள் சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி கௌரவித்தார். அவரைத் தொடர்ந்து வர்த்தக பிரமுகர்கள் , பல்வேறு சமூகப் பெரியோர்களும், துறைசார் வல்லுநர்களும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மொழிக்கும், இசைத் துறைக்கும், ஆன்மீகத்திற்கும் சுவாமி விபுலானந்தர் ஆற்றிய ஈடு இணையற்ற தொண்டினை நினைவு கூரும் வகையில், பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான அடிகளாரின் பற்றாளர்கள், ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் திரளாகக் கலந்துகொண்டு தங்களின் உணர்வுபூர்வமான அஞ்சலியைச் செலுத்தினார்கள்.





























































