SIVAKUMAR
ஈழத்துத் திரையுலகில், குறிப்பாக மட்டக்களப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘#இமு’ எனும் குறியீட்டுப் பெயரைக் கொண்ட புதிய முழுநீளத் திரைப்படத்தின் ‘பூஜை விழா’ பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
இத்திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மட்டக்களப்பு, கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் தொடங்கின. தயாரிப்பாளர் ரோஜஸ் டி சில்வாவின் தாயார், சித்தி விநாயகர் ஆலய சன்னிதானத்தில் திரைப்படத்திற்கான ‘கிளாப்’ (Clap) அடித்து படப்பிடிப்பை சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக மட்டக்களப்பின் முக்கிய ஆன்மீகத் தலங்களான:
தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா கிருஸ்தவ ஆலயம், மட்டக்களப்பு மங்களராமய ரஜமஹா விகாரை (பௌத்த வணக்கஸ்தலம்), கோட்டைமுனை ஹியாபுத்தீன் வலியுல்லாஹ் புனித தர்ஹா மசூதி
ஆகியவற்றிலும் விசேட ஆசிர்வாத பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பின் முன்னணி மற்றும் திறமைமிக்க இயக்குநரான கீ. கிஷாந்தின் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில், இளம் திறமையாளர்களான பிரதிஜன் கதாநாயகனாகவும், தனுஷ்கா கதாநாயகியாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் யுவநாதன், துஷி, சுகுமார் உள்ளிட்ட பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்திற்கு நிருஷாந்த் ஒளிப்பதிவு செய்ய, இயக்குநர் கீ. கிஷாந் கதையோட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இசை மற்றும் படத்தொகுப்பு (Editing) ஆகிய பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.
ஏற்கனவே சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள இத்திரைப்படத்தில், மட்டக்களப்பு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், பிரபல கதாசிரியருமான முரளிதரன் வில்லனாக புதிய பரிமாணத்தில் களமிறங்குகிறார். இவரது வித்தியாசமான நடிப்பு மற்றும் திரை ஆளுமை இத்திரைப்படத்திற்கு பெரும் பலமாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பிராந்திய கலைஞர்களின் கூட்டுமுயற்சியில், புதியதொரு நட்சத்திரக் கூட்டணியுடன் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படம் ஈழத்துச் சினிமா வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லைப் பதிக்கும் என கலை ஆர்வலர்களும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
"இலங்கையில், குறிப்பாக தமிழர் தாயகப் பகுதிகளில் ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவது என்பது நெருப்பாற்றில் நீந்தி கடப்பது போன்ற பெரும் சவாலான காரியமாகும்."
இவ்வாறான பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இயக்குநர் கிஷாந் இயக்கி வரும் இந்த சினிமா முயற்சிக்கு, இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகளும் கைகொடுத்து ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
தென்னிந்திய சினிமாவின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தமிழ் ரசிகர்களை, நமது சொந்த மண்ணின் படைப்புகளை நோக்கி மீட்டெடுக்க கிஷாந் போன்ற ஆளுமைமிக்க இயக்குநர்களைப் போல ஏனைய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


































