செட்டிப்பாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையம் (உவகை) – ஓராண்டு நிறைவு விழாவும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்

 
































மதுபாவனைக்கு அடிமையானவர்களுக்கு தரமான, மனிதநேயமிக்க மற்றும் முழுமையான புனர்வாழ்வு சேவைகளை வழங்கி வரும் செட்டிப்பாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையம் (உவகை) தனது ஓராண்டு நிறைவை முன்னிட்டு, உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் பாராட்டு விருது வழங்கும் விழா இன்று (20.07.2026) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. R. முரளீஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வை பிராந்திய மனநல வைத்திய அதிகாரி Dr. S. டான் சௌந்தரராஜா (Mental Health – Regional) அவர்கள் ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்வில் பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. K. மோகன்குமார், மனநல வைத்திய அதிகாரி Dr. அனுஷா சிறிசங்கர் (Medical Officer – Mental Health), பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், செட்டிப்பாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. K. அருள்ஜோதி, பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் M. புவனராஜ், அலுவலக உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், "உவகை" நிலையத்தின் கடந்த ஓராண்டு கால சேவைகள், சாதனைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான ஊடக அறிமுகம் இடம்பெற்றது. மதுபாவனைக்கு அடிமையானவர்களை சமூகத்தில் மீண்டும் பயனுள்ள, பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்கும் நோக்கில் நிலையம் மேற்கொண்டு வரும் பல்வேறு புனர்வாழ்வு மற்றும் மீளிணைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மனநலம் மற்றும் உள-சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் சேவையாற்றி வரும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களுக்கு பாராட்டு விருதுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. R. முரளீஸ்வரன் அவர்கள், மதுபாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதைத் தாண்டி, அவர்களின் மனநலம், குடும்ப உறவுகள் மற்றும் சமூக வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் பணியில் செட்டிப்பாளையம் பிராந்திய மதுபான புனர்வாழ்வு நிலையம் முன்னுதாரணமான சேவையை வழங்கி வருவதாக பாராட்டுத் தெரிவித்தார். மேலும், மனநல சேவைகளை வலுப்படுத்துவதில் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பும் சேவையுணர்வும் மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரத் துறைக்கு பெருமை சேர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையம் தண்டனை சாராத நடத்தை முகாமைத்துவ அணுகுமுறைகளை ஊக்குவித்தல், கற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துதல், வாழ்க்கைத் திட்டமிடல் மற்றும் இலக்கு நிர்ணயத்திற்கு வழிகாட்டுதல், தொடர்பாடல் திறன்களை வளர்த்தல், தொழில் வழிகாட்டல் மற்றும் தொழிற்பயிற்சி நோக்குநிலையை ஊக்குவித்தல், தற்கொலை அபாயம் மற்றும் வன்முறை நடத்தைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு தகுந்த ஆரம்பகட்ட முகாமைத்துவத்தை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான மற்றும் தரமான புனர்வாழ்வு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவில், தரமான புனர்வாழ்வு சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, மதுபாவனைக்கு அடிமையானவர்களின் உடல், உள மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்க, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தனது முழுமையான ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் தொடர்ந்து வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

"உவகை" நிலையத்தின் ஓராண்டு பயணத்தை சிறப்பிக்கும் இந்நிகழ்வு, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையை அங்கீகரித்து அவர்களை ஊக்குவித்ததோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் மனநல மற்றும் மதுபான புனர்வாழ்வு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது.