பல்லாயிரக்கணக்கானோரின் உயிருக்கு அச்சுறுத்தலாய் விளங்கும் பிரதான சந்தி: அதிகாரிகள் கவனிப்பார்களா?
மட்டக்களப்பு கல்லடி உப்போடைப் பகுதியில், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் என நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் புதிய கல்முனை வீதி - சிவானந்தா தேசிய பாடசாலை முன்பாகவுள்ள நாற்சந்தி தற்போது கடுமையான விபத்து அபாய வலயமாக மாறியுள்ளது. பொதுமக்களின் உயிருக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத ஒரு பதற்றமான சூழலே இங்கு நிலவி வருகிறது.
இந்த நாற்சந்தியானது கல்லடி உப்போடை வாழ் மக்களின் நாளாந்த ஜீவனோபாயத்தோடு மட்டுமன்றி, மட்டக்களப்பின் மிக முக்கிய 17 நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கான பிரதான நுழைவாயிலாகவும் நுழைவுப் பாதையாகவும் அமையப் பெற்றுள்ளது:
கல்வி நிறுவனங்கள்: சிவானந்தா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகளிர் கல்லூரி, சாரதா பாலர் பாடசாலை, சிவானந்தா பாடசாலை விடுதி, விளையாட்டு மைதானம்.
பொது நிறுவனங்கள்: ராமகிருஷ்ண மிஷன், வாசிகசாலை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) அலுவலகம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (விபுலாந்த வீதி).
பொதுக் கூடங்கள் & இதர வசதிகள்: ராமகிருஷ்ண மிஷன் மணி மண்டபம், துளசி கலாசார மண்டபம், முச்சக்கர வண்டி தரிப்பிடம், பேருந்து தரிப்பு நிலையம், நாகபுரம் குடியேற்ற கிராமம், இந்து மயானம்.
ஆன்மீகத் தலங்கள்: பேச்சி அம்மன் ஆலயம், சித்தி விநாயகர் கோவில், வம்மி பிள்ளையார் ஆலயம்.
தற்போது கல்லடி உப்போடை சித்தி விநாயகர் ஆலய திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தச் சந்தி ஊடாகவே பயணிக்கின்றனர்.
அடுத்தடுத்த மாதங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சி அம்மன் ஆலய திருக்கதவு திறக்கும் சடங்கும் பள்ளயமும் இடம்பெறவுள்ளன. இத்தகைய ஆன்மீக நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்கள், நிம்மதியாகக் கடவுளை வணங்க முடியாமல், வீதியைக் கடக்கும்போது "உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு" கடும் மன உளைச்சலுடனும் அச்சத்துடனும் பயணிக்கும் அவலநிலை நீடிக்கிறது.
கல்லடி வேலூர் 4ஆம் குறுக்கில் அமைந்துள்ள சக்தி வித்தியாலயத்திற்கு முன்பாக வேகத்தடை (Speed Breaker) அமைக்கப்பட்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் காத்தான்குடி, கல்முனை, அம்பாறை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் நாளாந்தம் அதிவேகமாகப் பயணிக்கும் சிவானந்தா பாடசாலைச் சந்தியில் ஒரு வேகத்தடையோ அல்லது சமிஞ்ஞை விளக்கோ இதுவரை அமைக்கப்படாதது ஏனோ? அதிகாரிகள் பொதுமக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் இதன் உண்மை நிலவரம் புரியும்!
குறிப்பாக, சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆகிய இரு பெரும் பாடசாலைகளும் நிறைவடையும் மதிய வேளையில், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டத்தை அடைகிறது.
கடந்த காலங்களில் இந்தச் சந்தியில் பல பாரிய விபத்துக்கள் இடம்பெற்று, பல உயிரிழப்புகளும் (மரணங்கள்) சம்பவித்துள்ளன. இன்னும் ஒரு உயிர் இந்த வீதியில் பலியாகும் வரை அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கப் போகிறார்களா?
எனவே, சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாநகர சபை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு:
சிவானந்தா பாடசாலை முன்பாகவுள்ள நாற்சந்தியில் நவீன சமிஞ்ஞை விளக்குகளை (Traffic Lights) பொருத்த வேண்டும்.
அதுவரை தற்காலிகமாக வேகத்தடைகளையாவது அமைத்து விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"விபத்துக்கள் இடம்பெற்ற பின் இரங்கல் தெரிவிப்பதை விட, விபத்துக்கள் நடக்கும் முன் சமிஞ்ஞை விளக்கு பொருத்துவதே புத்திசாலித்தனம்!"





