மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தின் புதிய கடினபந்து (Hardball) கிரிக்கெட் ஆடுகளம் உத்தியோகபூர்வமாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் சிறப்பு நிகழ்வு இன்று (07.06.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளைத் பொது முகாமையாளர் சுவாமி நிலமாதவானந்தா மஹராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆடுகளத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அதிதிகள், பாடசாலை அதிபர், பயிற்றுவிப்பாளர் ,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சிவானந்தா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக கடினபந்து கிரிக்கெட் ஆடுகளம் ஒன்று இல்லாத குறைபாடு இருந்து வந்த நிலையில், இந்த புதிய ஆடுகளத்தின் வரவு பாடசாலையின் விளையாட்டுத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. இப்புதிய வசதியானது மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதோடு, அவர்கள் மாவட்ட, மாகாண மட்டங்களைத் தாண்டி, தேசிய மட்டத்திலும் சாதனை படைத்து பாடசாலைக்கும் மட்டக்களப்பு மண்ணுக்கும் பெருமை சேர்க்க புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கிரிக்கெட் போட்டியும் சுவாரசியமாக நடைபெற்றதுடன், போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சிறப்பு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ள இப்புதிய ஆடுகள உருவாக்கத்திற்குப் பங்காற்றிய அனைவருக்கும் எமது ஊடகத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

























































