இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முதலாவது உலக யோகாசனப் போட்டியில் (1st World Yogasana Championship), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட மட்டக்களப்பு மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்து தாயகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த ஜூன் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை குஜராத்தில் நடைபெற்ற இப் போட்டியில், உலகளாவிய ரீதியில் 72க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500க்கும் அதிகமான சர்வதேசப் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய அணித் தேர்வும் மட்டக்களப்பு மாணவர்களின் பங்கேற்பும்:
இப் போட்டிக்கான இலங்கை தேசிய அணியைத் (National Team) தேர்வு செய்யும் போட்டிகளை "இலங்கை யோகாசன ஸ்போர்ட்ஸ் பெடரேஷன்" (Sri Lanka Yogasana Sports Federation) நடத்தியிருந்தது. இதில் மட்டக்களப்பு, சக்தி ஆனந்த யோகா பாடசாலையின் திறமைமிகு மாணவர்களான துவிஷா ரமேஷ் மற்றும் நிசாஹரி பிரஸ்ஸன்நாத் ஆகிய இருவரும் தேசிய அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களுடன் இணைந்து இலங்கையின் வேறு சில மாணவர்களும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
சர்வதேச மேடையில் பதக்க வேட்டை:
பிரபல யோகா ஆசிரியர் சிவசக்தி சிவபாதசுந்தரம் (BSc in Yoga & MSc in Yoga) அவர்களின் நேரடிப் பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ், சர்வதேச வீரர்களுக்கு சவாலாகக் களம் கண்ட மட்டக்களப்பு மாணவர்கள் பின்வரும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்:
துவிஷா ரமேஷ்: 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள்
நிசாஹரி பிரஸ்ஸன்நாத்: 1 வெண்கலப் பதக்கம்
சர்வதேச அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி, ஒட்டுமொத்த இலங்கைக்கும், குறிப்பாக மட்டக்களப்பு மண்ணிற்கும் பாரிய புகழைத் தேடித்தந்துள்ள இம்மாணவர்களுக்கும், அவர்களது பயிற்றுவிப்பாளருக்கும் பிராந்தியத்தின் பல தரப்பினரும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு, சர்வதேச தளம் வரை கொண்டு செல்வதற்குக் களமமைத்துக் கொடுத்த இலங்கை யோகாசன ஸ்போர்ட்ஸ் பெடரேஷனின் தலைவர் மதிப்பிற்குரிய ராஜ்குமார் அவர்களுக்கும், யோகாசன ஆலோசகர் மதிப்பிற்குரிய Dr. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் மாணவர்களின் சார்பிலும், யோகா பாடசாலையின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

.jpeg)
.jpeg)

.jpeg)





