இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் விசேட வரலாற்று நினைவு நிகழ்வுகளும், தோத்திர நன்றி ஆராதனையும் மிக விமர்சையாக நடைபெறவுள்ளன.
மட்டக்களப்பில் வடக்கு கிழக்கு திருமாவட்ட சபையின் அங்கமாக, அனைத்து மெதடிஸ்த மற்றும் செங்கலடி பிராந்திய திருச்சபை மக்களும் இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன் முக்கிய அங்கமாக, மிஷனரிமார்களின் தியாக வாழ்வு, ஆன்மீகப் பணி மற்றும் சமூகப் பணிகள் குறித்த விசேட கண்காட்சி ஒன்றும் காந்தி பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வையொட்டி மட்டக்களப்பின் 5 முக்கிய மையப் புள்ளிகளிலிருந்து ஒரே நேரத்தில் பேரணிகள் புறப்பட்டு காந்தி பூங்காவை வந்தடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேரணிகள் கலந்துகொள்ளும் பொதுமக்கள் கல்லடிப் பாலம்,மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில்,கோட்டைமுனை திருகோணமலை வீதி, ETI நிறுவனத்திற்குஅருகில், மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமாக உள்ளது. பொதுமக்கள் இந்த பேரணியில் இணைந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளுகின்றனர்.
அனைத்துப் பேரணிகளும் காந்தி பூங்காவை வந்தடைந்ததும், அங்கு அனைவரும் ஒன்று கூடி இறைவனுக்கு நன்றி செலுத்தும் கூட்டுப் பிரார்த்தனையும் விசேட ஆராதனையும் நடைபெறும்.
இவ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அரசாங்க அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்தோடு, அவர்களின் பங்கேற்புடன் விசேட கலை நிகழ்வுகளும் அரங்கேறவுள்ளன.
ஆன்மீகப் பணியோடு இணைந்து இந்நாட்டில் கல்வி மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய மிஷனரிமார்களின் அளப்பரிய அர்ப்பணிப்பை நினைவுகூரும் இந்நாளில், சாதி, மத பேதமின்றி அனைத்துப் பொதுமக்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு அழைக்கின்றனர்.





