EDITOR
மட்டக்களப்பு கல்லடி – உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் விவேகா பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், “விழுதுகள் கூடி வலிமை சேர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் 2026.09.06 அன்று நடைபெற்றது.
கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி நடராஜானந்தா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, அமரர் பிரசாந்தன் இராமையா அவர்களின் ஞாபகார்த்தமாக 1999ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்விரத்ததானப் பணியின் மூலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்வதுடன், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இரத்தத் தட்டுப்பாட்டினால் ஏற்படக்கூடிய உயிராபத்திலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பதே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது.
நிகழ்வில் கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர் சுவாமி உமாதிஷானந்தாஜி மகராஜ், முன்னாள் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும், நிதி அமைச்சின் திறைசேரி பிரதி பணிப்பாளர் நாயகமுமான திரு. வன்னியசிங்கம் வாசுதேவன், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது விவேகா பழைய மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பு வைத்தியர் டாக்டர் ப. பிரஷ்ணவி தலைமையில் வருகை தந்த தாதியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், குருதிச் சேகரிப்பு நடவடிக்கைகளை முறையாகவும் திறம்படவும் முன்னெடுத்தனர்.
இளைஞர்கள், பழைய மாணவர்கள் மற்றும் இரத்தக் கொடையாளர்களை ஒருங்கிணைத்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய மனிதநேயப் பணிகள், சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதுடன் ஏனைய பாடசாலைகள் மற்றும் அமைப்புகளுக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைகின்றன என நிகழ்வில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.
மேலும், உயிர்காக்கும் உன்னதப் பணியில் தன்னார்வத்துடன் இணைந்து குருதிக்கொடை வழங்கிய அனைத்து கொடையாளர்களுக்கும், நிகழ்வை ஏற்பாடு செய்த விவேகா பழைய மாணவர் சங்கத்தினருக்கும், குருதிச் சேகரிப்பில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.










































































