மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த திரு. என். இதயராஜன் அவர்கள் இன்றுடன் ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெறுகிறார்.
விழிப்புலன் இழப்புக்குட்பட்ட இவர், வாழ்வில் எதிர்கொண்ட எண்ணற்ற தடைகளையும் சவால்களையும் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் வென்றவர். கல்வியின் மூலம் தன்னிறைவு பெற்று, பிறரைச் சார்ந்து வாழாமல், பிறரைத் தாங்கி வாழும் உயரிய பண்புடன் கிழக்கு மாகாண விழிப்புலனற்றோர் சமூகத்தின் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார்.
கிழக்கு மாகாணத்தில் விழிப்புலன் இழப்புக்குட்பட்டோரில் முதலாவது பட்டதாரியும், முதலாவது முதுமாணிப் பட்டதாரியும் இவரே. மேலும், அகில இலங்கை சமாதான நீதவான் என்ற கௌரவப் பதவியையும் பெற்றுள்ளார்.
அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்ற உயரிய கொள்கையுடன் வாழும் இவர், சிறந்த பண்பாளராகவும், அரசியல் விஞ்ஞானப் பாடத்தை மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் கற்பித்து சிறந்த பெறுபேறுகளைப் பெறச் செய்த நல்லாசிரியராகவும், திறமையான பேச்சாளராகவும் விளங்கியுள்ளார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை கைதடி செவிப்புலன் மற்றும் விழிப்புலன் இழந்தோருக்கான நபீல்ட் பாடசாலையில் பயின்றார். இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி றிபேக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் கற்றார். வாழ்வகத்தின் பழைய மாணவரான இவர், அங்கு தங்கியிருந்து தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பு கல்வி டிப்ளோமாவையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப் பட்டத்தையும் பெற்று தனது தொழில்வாண்மைத்துவத்தை மேலும் உயர்த்திக் கொண்டார்.
ஆரயம்பதியில் இல்லற வாழ்வில் இணைந்த இவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உள்ளனர். இரு புதல்வர்கள் மின்னணுப் பொறியியலாளர்களாகவும், ஒரு புதல்வர் தானியக்கப் பொறியியல் டிப்ளோமாதாரராகவும் உள்ளார். இளைய மகள் தற்போது பாடசாலையில் கல்வி பயின்று வருகிறார். இவ்வாறான மகிழ்வான தருணத்தில், அண்மையில் தனது துணைவியாரை இழந்த துயரையும் அவர் தாங்கிச் சென்றுள்ளார்.
கிழக்கு மாகாண விழிப்புலனற்ற சிறார்களுக்கு தான் எதிர்கொண்ட தடைகளும் சவால்களும் ஏற்படக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், 1992 ஆம் ஆண்டு மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தற்போது தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை முகாமைத்துவ சபையின் தலைவராகச் செயற்பட்டு வருகிறார்.
அவரது கனவு இன்று நனவாகியுள்ளது. தரிசனம் பாடசாலையில் பிரெயில் முறையின் மூலம் அடிப்படைக் கல்வி கற்று, பின்னர் பொதுப் பாடசாலைகளில் உட்படுத்தல் கல்வியின் வழியாகப் பயின்று, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அரசுப் பணியில் இணைந்துள்ளோர் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இது அவர் விதைத்த விதையின் இனிய பலனாகும்.
அன்பிற்கினிய திரு. என். இதயராஜன் அவர்களின் ஓய்வுக்காலம் ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் இறையருளால் நிறைந்ததாக அமைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
"உங்கள் சேவை ஓய்வு பெறலாம்; ஆனால் நீங்கள் ஏற்றிய அறிவொளி என்றும் அணையாது."





