பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு, பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் (12) மட்டக்களப்பில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் “பல்கலைக்கழக சாதனையாளர்களின் பெருமை” எனும் தொனிப்பொருளில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) இராஜதுரை அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் அவர்களால் ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோசான் கமகே, கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ உதவிகள், அத்தியாவசிய உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.
மாணவர்களின் கல்விச் சாதனைகள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











































































