EDITOR
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலையில் 2026ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் ச. தர்முதாஸ் தலைமையில், பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
2026ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையிலிருந்து 58 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், அவர்களில் 57 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். மேலும், 35 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன், 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
இச்சிறப்பான பெறுபேற்றுக்கு வழிகாட்டிய தரம் 5 வகுப்பாசிரியர்களான திருமதி A. சிவநாதன், திருமதி P. ராஜேஸ்வரன், பகுதித் தலைவர், ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் ஆகியோரும் நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டனர்.
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களான,
ஸ்ரீகரன் கிஷோதனா
திலக்ஷன் சாராஷயங்கா
மரியசீலன் கவிஷ்கா
அமல்ராஜ் நவீஷ்கா
விமல்ராஜ் ரிஷ்வந்திக்கா
ஆகிய மாணவர்களும் சிறப்பாகக் கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், மாணவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், எதிர்காலத்திலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நீங்கள் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமல் போயிருக்கலாம். அதற்காக ஒருபோதும் மனம் தளர வேண்டாம். ஒரு பரீட்சையின் பெறுபேறு உங்கள் அறிவையும், திறமையையும், எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில்லை.
இந்தப் பரீட்சையில் சித்தி பெறவில்லை என்பது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி அல்ல. மாறாக, உங்கள் எதிர்காலப் பயணத்தில் இன்னும் சிறப்பாக முயற்சி செய்ய வேண்டிய ஒரு சிறிய அனுபவம் மட்டுமே.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி திறமைகள் உள்ளன. சிலர் கல்வியில் சிறந்து விளங்கலாம்; சிலர் விளையாட்டில், கலையில், இசையில், தொழில்நுட்பத்தில் அல்லது வேறு துறைகளில் சாதனை படைக்கலாம். உங்களுக்குள் இருக்கும் திறமையை நம்புங்கள்.
இந்தப் பெறுபேற்றை நினைத்து அழ வேண்டாம்; உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்; “என்னால் முடியாது” என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக,
“நான் இன்னும் சிறப்பாக முயற்சி செய்வேன். என்னாலும் சாதிக்க முடியும்!”என்று நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.
அன்புப் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளின் பெறுபேற்றை வைத்து அவர்களைத் திட்டவோ, மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடவோ வேண்டாம். இந்த நேரத்தில் அவர்களுக்கு மிகவும் தேவையானது உங்கள் அன்பும், ஆதரவும், ஊக்கமும் ஆகும்.
“ஒரு பரீட்சையில் கிடைத்த மதிப்பெண் வாழ்க்கையின் இறுதி முடிவு அல்ல; முயற்சியைத் தொடரும் மன உறுதியே உண்மையான வெற்றியின் தொடக்கம்.”
மாணவர்களே, உங்கள் வெற்றிக்கான பாதை இன்னும் நீண்டது… சிறந்த எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது!







































