இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி .சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களை கௌரவித்தார் .

 


 

EDITOR

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று சிறப்பான சாதனைகளைப் படைத்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பாராட்டி விருது வழங்கும்  நிகழ்வு, பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் (12) மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில்  சிறப்பாக நடைபெற்றது.

 நாட்டின் உயர்கல்வித் துறையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி சாதனைகளைப் படைத்துவரும் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த தேசிய நிகழ்ச்சித் தொடர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 இதனுடன், ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்து சிறந்த சேவையாற்றிய பிரதேச செயலகங்களைப் பாராட்டி விருது வழங்கும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.

  2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச செயலக மட்டத்தில் சிறப்பாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தியமைக்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மதிப்பீட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

 ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை மக்களுக்கு சிறந்த முறையில் சென்றடையச் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் வழங்கப்பட்ட சேவைகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு இடம்  பெற்றது .

 சிறந்த சேவைக்காக வழங்கப்பட்ட இவ்விருதை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடமிருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் பெற்றுக்கொண்டார்.

  மக்களுக்குத் தேவையான சேவைகளை துரிதமாகவும் திறம்படவும் வழங்குவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கிடைத்துள்ள இந்தப் பாராட்டு, அங்கு பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு, ஒற்றுமையான செயற்பாடு மற்றும் குழு முயற்சிக்கு கிடைத்துள்ள சிறப்பான அங்கீகாரமாகும். இது பிரதேச செயலகத்தின் பணிச் சிறப்பையும் சேவை அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டும் முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது. 

 ஒரு அரச அலுவலகம் என்பது வெறுமனே நிர்வாகப் பணிகள் நடைபெறும் இடமாக அல்லாமல், மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் கடமை உணர்வுடனும் சேவை மனப்பாங்குடனும் செயற்படும் மக்கள் சேவை மையமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணியாளரும் தமது கடமையை நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுக்கும்போது, அதன் பயன் நேரடியாக மக்களைச் சென்றடையும்.

மக்களின் நம்பிக்கையைப் பேணுவதையும், அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு வழங்குவதையும் தமது முதன்மைக் கடமையாகக் கொண்டு செயற்படும் அரச அலுவலகங்களே உண்மையான மக்கள் சேவையின் அடையாளமாகத் திகழ்கின்றன. அந்த வகையில், பொறுப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, கடமை உணர்வு மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறந்த சேவையை வழங்கும் ஓர் அரச நிறுவனமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகம் திகழ்வதுடன், ஏனைய அரச நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது பெருமைக்குரிய விடயமாகும் .

மாவட்ட , மாகாண மட்டங்களை தாண்டி தேசிய மட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முதலிடம் பெறவேண்டும் என்பதே மட்டக்களப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும்